Anannyah Kumari Alex: கேரள தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த முதல் திருநங்கை மரணம்..!
வானொலி வர்ணனையாளர், ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர்.
கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முதல் திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. வானொலி வர்ணனையாளர், ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். இவரின் மறைவு, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முன்னதாக செய்தி நிறுவனத்துக்கு அனன்யாகுமாரி அலெக்ஸ் அளித்த நேர்காணலில், "திருநங்கைகள் பொது சமூகத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டுப்போய் இருக்கின்றார்கள். விளிம்புநிலை மனிதர்களாகவே திருநங்கைகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். திருநங்கைகளும் நல்ல தலைவர்களாக இருக்க முடியும். இதை நிரூபிக்க விரும்புகிறேன்" எனக் கூறினார்.
அனன்யா குமாரி அலெக்ஸ் வெங்காரா சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார். இந்த தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளாராக பி.கே. குன்ஹாலிக்குட்டியும், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) வேட்பாளர் பி.ஜிஜியும் போட்டியிட்டனர். கேரளாவின் முதல் திருநங்கை வானொலி தொகுப்பாளராகவும், செய்தி தொகுப்பாளராகவும் சாதனை படைத்த அனன்யா குமாரி அலெக்ஸ், ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இருப்பினும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கும் ஒரு சில தினங்களுக்கு முன்பாக தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
Health min @VeenaGeorge03 ordered probe into death of transgender activist Anannyah Kumari Alex. Former RJ-anchor, Anannyah had raised complaint over failure of sex reassignment surgery. Govt to constitute panel to study issues faced by transpersons in connection with surgery pic.twitter.com/co5ikRspNP
— Jisha Surya (@jishasurya) July 21, 2021
இதற்கிடையே, கடந்தாண்டு கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இறப்பதற்கு, சில நாட்கள் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மருத்துவர்களின் அலட்சியத்தால் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன். நான், மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றி பெறவில்லை. கடந்த,ஒரு வருடமாக தொடர்ச்சியான வலிகளை அனுபவித்து வருகிறேன். நிச்சயமாக, மருத்துவமனைக்கு எதிராக சட்டப்படி வழக்கு தொடர்வேன்" என்று தெரிவித்தார்.
திருநங்கை அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில், இயற்கைக்கு மாறான மரணம் என எர்ணாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கேரள சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் திருநங்கை யார்?
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104. சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050