Kedarnath Temple: 6 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்ட கேதார்நாத் கோயில்
உத்தரக்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 6 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்துகளின் புனித தலங்களில் ஒன்று கேதார்நாத் சிவன் கோயில். இந்தக் கோயில் உத்தரக்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கேதார்நாத்,பத்ரிநாத்,கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட நான்கும் இமாலய மலையில் அமைந்துள்ள இந்துக்களின் புனித தலங்கள் ஆகும். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திறக்கப்பட்டும். பின்னர் குளிர்காலத்தில் பனிப்பொழிவு காரணமாக முடப்படும். அந்தவகையில் கேதார்நாத் கோயில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி முடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த சிவலிங்கம் ஓம்காரேஸ்வரர் கோயில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 5 மணியளவில் சிறப்பு பூஜையுடன் மீண்டும் கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஓம்காரேஸ்வரர் கோயிலில் இருந்து சிவலிங்கமும் மீண்டும் இங்கு எடுத்து வைக்கப்பட்டது. இந்தக் கோயில் திறக்கப்பட்டது தொடர்பாக உத்தரக்காண்ட மாநில முதல்வரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அத்துடன் கோயில் திறக்கப்பட்டாலும் தற்போது நிலவும் கொரோனா சூழல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரக்காண்ட் அரசு தெரிவித்துள்ளது. இந்த கோயில் தற்போது பூஜைக்காக மட்டும் திறக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் பக்தர்கள் அனைவரும் கோயிலுக்கு வராமல் தங்கள் இல்லங்களிலிருந்து கடவுளை வேண்டிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#WATCH | Opening ceremony of portals of Kedarnath temple, Uttarakhand pic.twitter.com/qW3XiCjDjV
— ANI (@ANI) May 17, 2021
முன்னதாக கடந்த 14ஆம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்கள் திறக்கப்பட்டன. மேலும் மற்றொரு புனித தலமான பத்ரிநாத் கோயில் நாளை காலை 4.15 மணிக்கு திறக்க உள்ளதாக உத்தரக்காண்ட் அரசு தெரிவித்துள்ளது. இந்த கோயில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி மூடப்பட்டது. இந்த கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் பூஜை மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜையில் கலந்து கொள்வர்கள் அனைத்து விதமான கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையையும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.