10 வயது பள்ளி சிறுவனை முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியர்...டெல்லியை தொடர்ந்து கர்நாடகாவில் கொடூரம்..!
சிறுவனை பயங்கரமாக தாக்கிய பிறகு, அவனை பள்ளியின் முதல் மாடியில் இருந்து ஆசிரியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் அரசு பள்ளி ஒன்றில் 10 வயது சிறுவனை அவனது ஆசிரியரே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை பயங்கரமாக தாக்கிய பிறகு, அவனை பள்ளியின் முதல் மாடியில் இருந்து ஆசிரியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
வடக்கு கர்நாடகாவில் உள்ள ஹக்லி கிராமத்தில் ஆதர்ஷ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் முத்தப்பா ஹடகாலி. அதே பள்ளியில் நான்காம் வகுப்பை சேர்ந்த பாரத் என்ற சிறுவனை மண்வெட்டியை கொண்டு அவர் தாக்கியுள்ளார். இதில் சிறுவன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப்பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை விவரித்துள்ள கடக் மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி சிவபிரகாஷ் தேவராஜு, "காரணம். ஏன் என்று தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில் அவர்களுக்குள் சில குடும்ப பிரச்சனைகள் இருப்பது போல தெரிகிறது. பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் பரத்தின் தாயார் கீதா பார்கரை கூட முத்தப்பா அடித்துள்ளார்.
கீதா பார்கர் மற்றும் மற்றொரு ஆசிரியர் நங்கன்கவுடா பாட்டீல் ஆகியோர் தங்களை தற்காத்து கொள்ள முயற்சித்தனர். ஆனாலும், தாக்கப்பட்டனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பள்ளியின் ஒப்பந்த ஊழியரான முத்தப்பா ஹடகலியை தற்போது காணவில்லை" என்றார்.
மற்றொரு சம்பவம்
கடந்த வாரம் டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆத்திரமடைந்த ஆசிரியர், ஐந்தாம் வகுப்பு மாணவியை கத்தரிக்கோலால் தாக்கி பள்ளி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசினார்.
கைவினைப் பயிற்சி வகுப்பின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களை வகுப்பறையில் வைத்து பூட்டி தண்ணீர் பாட்டிலை கொண்டு அவர் தாக்கியுள்ளார்.
பின்னர், சிறுமியை தூக்கி, தலைமுடியை வெட்டி, பால்கனியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். மற்றொரு ஆசிரியை கீதா தேஷ்வால் மாணவியை கீழே வீசுவதை தடுக்க முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை.
மருத்துவமனைக்கு சிறுமி உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது கன்னத்தில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு, சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை என மருத்துவர்கள் கூறினர். மேலும் கீழே விழுந்ததில் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.
அந்த பள்ளி டெல்லியின் மாநகராட்சி அமைப்பால் நடத்தப்படுகிறது. கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், இந்த குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை.