கழிவறையை சுத்தப்படுத்திய பள்ளி குழந்தைகள் - சாட்டையை சுழற்றிய பள்ளிக்கல்வித்துறை
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளை வைத்து பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தப்படுத்துவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. கடந்த சில வாராங்களாக, இது போன்ற தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கோலாரில் உள்ள குடியிருப்பு பள்ளி ஒன்றிலும் பெங்களுருவில் உள்ள பள்ளி ஒன்றிலும் ஷிவமோகாவில் உள்ள பள்ளி ஒன்றிலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு:
இந்த நிலையில், கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில், "பள்ளி கழிவறைகளில் குழந்தைகள் சுத்தப்படுத்துவது போன்ற சம்பவங்களை அரசு தீவிரமாக எடுத்து கொள்கிறது.
எனவே, மாநிலத்தின் அனைத்து அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலும் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் மாணவர்களை எந்தச் சூழ்நிலையிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு, தனித்திறமையை வெளிப்படுத்த உதவும் நடவடிக்கைகளில் மட்டுமே மாணவர்கள் ஈடுபட வேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் இருந்து மாணவர்களை விலக்கி வைப்பது ஆசிரியர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுக்களின் கடமையாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
"பள்ளி நேரங்களில் கழிப்பறைகளை பூட்டக்கூடாது"
அதிகாரிகள், ஆசிரியர்களை எச்சரித்த கர்நாடக பள்ளிக்கல்வித்துறை, "மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தப்படுத்தினால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு பதிவு செய்யப்படும். கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை கண்காணித்து, சரியான நேரத்தில் சென்று கழிவறைகளை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி நேரங்களில் கழிப்பறைகளை பூட்டக்கூடாது. அலட்சியம் இருந்தால், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.
பள்ளிக் குழந்தைகளை வைத்து கழிவறையை சுத்தப்படுத்துவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக எச்சரித்திருந்தார். "பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவது மிகவும் கேவலமான செயல். இது போன்ற செயல்கள் சகிக்க முடியாதவை" என சித்தராமையா கூறியிருந்தார்.
அதுமட்டும் இன்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நிலவும் நிலை குறித்து ஆராய கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். பள்ளிகளில் கழிவறையை சுத்தப்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு பராமரிப்புக்கு என தனி மானியங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என்றும அவற்றை பள்ளி மேம்பாட்டு கண்காணிப்பு குழுவுடன் இணைந்து படிப்படியாக பயன்படுத்தப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.