Karnataka electoral history: 30 ஆண்டுகளில் 15 முறை முதலமைச்சர்கள் மாற்றம்... கர்நாடக தேர்தல் வரலாறு..!
கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில், ஒரே ஒரு முதலமைச்சர்தான், தனது 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.
நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக இருப்பது கர்நாடகம். சுதந்திரம் பெற்ற காலம் முதல் தற்போது வரை பல்வேறு காரணங்களால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற மாநிலமாக கர்நாடகா உள்ளது. அந்த வகையில், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கிய காரணம் இரண்டு.
கர்நாடக அரசியல் வரலாறு:
ஒன்று, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள், கர்நாடகாவில் இருந்து வந்துள்ளனர். சுதந்திர போராட்ட காலத்தில், கோபால கிருஷ்ண கோகலே தொடங்கி, சமகால அரசியலில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே வரை, முக்கியமான தலைவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
கர்நாடகா, அரசியல் முக்கியத்துவம் பெறுவதற்கு இரண்டாவது முக்கிய காரணம், தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். அதேபோல, பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதி கொள்ளும் ஒரே தென்னிந்திய மாநிலம் கர்நாடகாதான்.
இப்படிப்பட்ட, கர்நாடகாவில் நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், நாட்டின் ஒட்டு மொத்த கவனமும் அந்த மாநிலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக தேர்தல் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், கர்நாடகாவின் தேர்தல் வரலாறு குறித்து பார்ப்போம்.
30 ஆண்டுகளில் 15 முறை முதலமைச்சர்கள் மாற்றம்:
கடந்த 30 ஆண்டுகளில், கர்நாடகாவில் 30 முறை முதலமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில், ஒரே ஒரு முதலமைச்சர்தான், தனது 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளார். அவர் வேறு யாரும் அல்ல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல், ஐந்து காலத்திற்கு மேல் ராமகிருஷ்ண ஹெக்டே முதலமைச்சராக பதவி வகித்தாலும், இருவேறு சட்டப்பேரவை பதவி காலத்தில்தான், அவர் ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.
சித்தராமையாவை தவிர்த்து, இரண்டு முதலமைச்சர்கள் மட்டும்தான் ஒரே பதவி காலத்தில் ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ளனர். அவர்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான்.
கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரையில், நிஜலிங்கப்பாவும் 1972 முதல் 1977 வரையில், தேவராஜாவும் தங்களது பதவிகாலத்தை நிறைவு செய்துள்ளனர்.
மற்ற மாநிலங்களை காட்டிலும், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது கடினமாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம். மாநிலம் முழுவதும் பாஜக, காங்கிரஸ் பலம் பொருந்திய கட்சிகளாக திகழ்ந்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டையாக பழைய மைசூரு பகுதி உள்ளது.
பெங்களூர் (கிராமப்புறம்) தொடங்கி சாமராஜநகர் மாவட்டம் வரையில், பழைய மைசூரு பகுதி நீள்கிறது. 61 தொகுதிகளை கொண்ட பழைய மைசூரு பகுதிதான், அடுத்த ஆட்சி அமைக்க போவது யார் என்பதை தீர்மானித்து வருகிறது.