Karnataka Election 2023: கார்கே மகனுக்கு ஜே ஜே..! குமாரசாமி மகனுக்கு பெப்பே..! கர்நாடகாவில் கதி கலங்கிய அரசியல் வாரிசுகள்..!
கர்நாடக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மரண அடி கொடுத்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
காங்கிரஸ் அபாரம்:
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களை தாண்டி விட்டது.
இந்நிலையில், தற்போதையை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 136 இடங்களிலும், பாஜக 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், முக்கிய தலைவர்களின் வாரிசுகளின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்.
நிகில் குமாரசாமி பின்னடைவு
ராமநகரா தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் உசேன் நின்றார். பாஜக சார்பில் கவுதம் மாரிலிங்ககவுடா போட்டியிட்டார்.
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி தோல்வி முகம் கண்டு வருகிறார். நிகில் குமாரசாமி தான் போட்டியிட்ட ராமநகரா தொகுதியில் 76,439 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இக்பால் உசேன் 87,285 வாக்குள் பெற்று முன்னிலையில் உள்ளார். மேலும், இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கவுதம் மாரிலிங்ககவுடா 12,821 வாக்குகள் பெற்றுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் இக்பாலை தோற்கடித்து குமாரசாமி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவருக்கு பதிலாக, அவரது மகன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
பிரியங்க் கார்கே முன்னிலை
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே சித்தாப்பூர் தொகுதியில் களமிறங்கினார். இவரை எதிர்ந்து ஜேடிஎஸ் சார்பில் சுபாஷ் சந்திர ரத்தோர், பாஜக சார்பில் மணிகண்ட் ரத்தோட் போட்டியிட்டனர்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே சித்தாப்பூர் தொகுதியில் 13,640 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதே போன்று, இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜேடிஎஸ் சார்பில் சுபாஷ் சந்திர ரத்தோர் தோல்வியை கண்டு வருகிறார். பிரியங்க் கார்கே 2013 மற்றும் 2018 தேர்தல்களிலும் இந்த தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக எம்.எல்.ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ஒய்.விஜயேந்திரா ஷிகாரிபுரா முன்னிலை
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கோனி போட்டியிட்டார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கோனி போட்டியிட்டார். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்படி, எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா 19,936 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோன்று, காங்கிரஸ் வேட்பாளர் கோனி குறைந்த வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். எனவே இங்கு கிட்டதட்ட விஜயேந்திராவின் வெற்றி இந்த உறுதியாக உள்ளதாக தெரிகிறிது.