Karnataka BJP : காங்கிரஸை நோக்கி படையெடுக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள்.. அதிர்ச்சியில் கர்நாடக பாஜக..
கர்நாடகாவில் பாஜக தனி மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சியை பிடித்த நிலையில் தற்போது அக்கட்சியில் இருந்து பலரும் விலகி காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.
கர்நாடகாவில் முன்னாள் துணை முதலமைச்சர் உள்பட பாஜகவினர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட உடனேயே அம்மாநிலத்தில் உள்ள கட்சிகள் பரபரவென வேலையை ஆரம்பித்துவிட்டன. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் பாஜகவில் இருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறி வருவது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே பல்லாரி மாவட்டத்தில் உள்ள குட்லிகி தொகுதியின் பாஜக எம்எல்ஏ NY கோபால கிருஷ்ணா கடந்த சில தினங்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்தார். மொலகல்முரு தொகுதியின் எம்எல்ஏ-வாக 4 முறையும், பெல்லாரி தொகுதியின் எம்எல்ஏ-வாகவும் இருந்த கோபாலகிருஷ்ணா கடந்த 2018ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது குட்லிகி எம்எல்ஏவாக இருக்கும் அவர் வால்மிகி நாயக் சமூகத்தை சேர்ந்தவர். 5 முறை காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்தவருக்கு சீட் மறுக்கப்பட்டதையடுத்து பாஜகவிற்கு தாவினார். தற்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளனர். முன்னதாக பாஜக முன்னாள் எம் எல் ஏக்களான நஞ்சுண்டசாமி மற்றும் மனோகர் அய்னாபூர் ஆகியோர், சித்தராமையா, டிகே சிவக்குமார் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.
#WATCH | Former Karnataka Deputy CM Laxman Savadi meets State Congress president DK Shivakumar & State LoP Siddaramaiah at the latter's residence in Bengaluru
— ANI (@ANI) April 14, 2023
Laxman Savadi on April 12 resigned as Legislative Council member & from the primary membership of the BJP after losing… pic.twitter.com/fvaEm75IKm
தற்போது கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஸ்மன் சாவடி காங்கிரஸில் இணைந்துள்ளார். போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து கடந்த 3 நாள்களுக்கு முன் விலகிய அவர் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது துணை முதலமைச்சராக இருந்த சாவடி கர்நாடக பாஜகவின் வருங்கால முகமாக அறியப்பட்டார். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளதோடு, அரசியல் ஓய்வையும் அறிவித்துள்ளார். மேலும், எம்பி குமாரசாமி, நேரு ஓலேகர் மற்றும் கூலிஹட்டி சேகர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 18 சிட்டிங் எம் எல் ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அதிருப்தியின் காரணமாக பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. வரும் நாள்களில் மேலும் பலர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைவார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
அதேபோல ஜனதாதளத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ராமசாமியும் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். 4 முறை எம்எல்ஏவாக இருந்த அவர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். எஸ்.ஆர். சீனிவாஸும் ஜனதாதளத்தில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக தனி மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சியை பிடித்த நிலையில் தற்போது அக்கட்சியில் இருந்து பலரும் விலகி காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சூழலில் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலரே அக்கட்சியில் இருந்து விலகுவதால் பாஜகவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.