Cauvery Water: காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு.. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க டி.கே சிவகுமார் முடிவு..
காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை தொடர்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும், இதனால் தமிழ்நாடு அதிகாரிகள் கூட்டத்தின் பாதியிலேயே வெளிநடப்பு செய்ததாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையும், கரநாடக அரசு விடுத்த கோரிக்கையும் விசாரித்து முடிவெடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில், காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீர் 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காவிரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து 4,293 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6,398 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 4,398 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில் 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 24 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி), கபினியில் 13 டி.எம்.சி., ஹாரங்கியில் 7 டி.எம்.சி., ஹேமாவதியில் 25 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் நிலமையை எடுத்து கூறியுள்ளோம். மேலும் இந்த உத்தரவை தொடர்ந்து சட்ட வல்லுநர்களுடன் அலோசித்தி முதலமைச்சரிடம் பேச உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Senthil Balaji: ஜாமின் கேட்ட செந்தில் பாலாஜி.. நீதிபதி பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா..?