Karnataka Hijab Row: | தணியாத ஹிஜாப் எதிர்ப்பு.! கர்நாடக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு எதிராக காவித்துண்டு அணிந்து ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் வலுத்துள்ள நிலையில் விடுமுறை உத்தரவை மாநில அரசு அறிவித்துள்ளது.
தொடரும் பதற்றம்..
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வர 5 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று (பிப்.7) கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறோரு வகுப்பில் அமர வைக்கப்படுவர். அவர்களுக்குக் கற்பித்தல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்ந்து பதற்ற நிலையிலேயே உள்ளது.
அரசியலமைப்புச் சட்டமே புனிதமான பகவத் கீதை..
இந்நிலையில் இதுகுறித்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத், ஹிஜாப் அணியும் மாணவிகள் தரப்பில் இருந்து வாதாடினார். அவர், ''முஸ்லிம் கலாச்சாரத்தில், பெண்கள் தலையில் ஹிஜாப் அணிவது அடிப்படையான ஒன்று'' என்று தெரிவித்தார்.
எனினும் அட்வகேட் ஜெனரல் அரசுத் தரப்பில் வாதாடும்போது, ''கல்லூரி சீருடைகளைத் தீர்மானித்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தைக் கல்லூரிகளுக்குக் கொடுத்துவிட்டோம். விதிமுறைகளில் தளர்வு தேவைப்படும் மாணவர்கள், கல்லூரி வளர்ச்சிக் குழுவை அணுகலாம்'' என்று தெரிவித்தார். குரானில், பெண்களின் கழுத்துப் பகுதி அவர்களின் கணவரைத் தவிர வேறு யாருக்கும் காட்டப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாகக் கூறிய காமத், அதை நீதிமன்றத்தில் வாசித்துக் காண்பித்தார். மேலும் பேசிய காமத், ''புனித குரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது தேவையான சமய நடைமுறையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் அரசின் உத்தரவு மாநிலக் கல்வி விதிகளின் எல்லைக்குப் புறம்பானது. இதை வெளியிட மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை. மதச்சார்பற்ற எண்ணங்களில் மத நடைமுறைகளைச் சோதித்துப் பார்க்கக் கூடாது'' என்று காமத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், ''நாங்கள் சட்டப்படியே நடப்போம். விருப்பங்கள், உணர்வுகளின் அடிப்படையில் எதையும் தெரிவிக்க மாட்டோம். நாங்கள் அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ, அதன்படியே நடப்போம். எங்களுக்கு, அரசியலமைப்புச் சட்டமே புனிதமான பகவத் கீதை'' என்று கருத்துத் தெரிவித்துள்ளது.