மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக எம்.பி.க்கள் குழு.. நடந்தது என்ன?
காவிரி நதிநீர் பங்கீடு குறித்த சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் போது தமிழ்நாட்டிற்கு 5000 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது.
காவிரி பிரச்னை:
ஆனால், கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என்று கூறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகா அரசு. காவிரி நதிநீர் பங்கீடு குறித்த சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல், கர்நாடாகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லை, தங்கள் மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக நீர் இருப்பை உறுதி செய்ய வேண்டும், தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே போதிய நீர் திறந்து விடப்பட்டதாக அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற பிரச்னைகளை தருவதாக, முதலமைச்சர் சித்தராமையா பேசியிருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்த அவசர மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக எம்பிக்கள் குழு:
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் குழு, இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் போதிய தண்ணீர் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்பு கொள்ள வேண்டும் என கர்நாடக குழு வலியுறுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை:
இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஜி.உமாபதி ஆஜராகி, தமிழக அரசின் மனுவை செப்டம்பர் 11, 12ஆம் தேதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பி.ஆர்.கவாய் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழக அரசின் மனு செப்டம்பர் 21ஆம் தேதி விசாரணை எடுத்தக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.