Karnataka: ”வாங்கிய கடனை திருப்பி கொடுங்கள்” - காபி தோட்டத்தில் அடைத்து வைக்கப்பட்ட பட்டியலின தொழிலாளர்கள்
கர்நாடகாவில் தலித் தொழிலாளர்கள் 16 பேர் தாக்கப்பட்டு, சிக்கமகளூரு காபி எஸ்டேட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Karnataka: 16 dalit workers locked: கர்நாடகாவில் தலித் தொழிலாளர்கள் 16 பேர் தாக்கப்பட்டு, சிக்கமகளூரு காபி எஸ்டேட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா: கடனை வசூலிப்பது தொடர்பாக காபி எஸ்டேட் உரிமையாளரும் அவரது மகனும் பட்டியலினத் தொழிலாளர்கள் 16 பேரை அக்டோபர் 8 ஆம் தேதி சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள ஹுசனேஹள்ளியில் தாக்கி அவர்களது வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
NDTV இன் செய்தியின்படி, இந்த சம்பவம் தொடர்பாக அர்பிதா என்ற பெண் ஒருவர் அளித்த புகாரில் காபி எஸ்டேட் உரிமையாளர் ஜெகதீஷ் கவுடா மற்றும் அவரது மகன் திலக் ஆகியோர் மீது, எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்டம் 2015ன் கீழ் பாலேஹொன்னூர் காவல் நிலையத்தில் அக்டோபர் 11ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த தோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஆறு பட்டியலின குடும்பங்கள் வேலை செய்து வந்தனர். அவர்கள் எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர்கள் காலனியில் தங்கியிருந்தனர். அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட தகராறில், 15 நாட்களுக்கு முன்பு, தொழிலாளர்களில் ஒருவரை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அந்த எஸ்டேட்டில் வேலை செய்ய வேண்டாம் என்ற தொழிலாளர்கள் முடிவு எடுத்தனர். ஆனால் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்த பின்பு தான் இடத்தை விட்டுச் வெளியே செல்ல முடியும் என்று காபி எஸ்டேட் உரிமையாளர் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பணத்தை திருப்பி தராததாக தொழிலாளர்கள் 16 பேரை திட்டியதுடன் செல்போன்களையும் பறித்ததாக கூறப்படுகிறது. மேலும் செல்போன்களை தர மறுத்த ஒரு பெண் உட்பட 3 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தாக்கப்பட்ட கர்ப்பிணி சிக்கமகளூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு அந்த பெண் தனது குழந்தையை இழந்ததாக சொல்லப்படுகிறது. சிக்கமகளூரு காபி எஸ்டேட்டிற்கு காவல்துறை சென்று விசாரணை நடத்தினர். இதனை அடுத்து அடைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை காவல்துறை அதிகாரிகள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்டேட் உரிமையாளர் ஜெகதீஷிடம் தொழிலாளர்கள் கடன் வாங்கியுள்ளனர். ரூபாய் 9 லட்சம் கடனை திருப்பி செலுத்தாததால் 16 பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ஜெனுகத்தே கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.