Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
மதக் கலவரத்தை தூண்டி திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக பாஜக மாற்ற நினைப்பதாக கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தீயாய் பரவியுள்ள நிலையில், அங்கு மதக் கலவரத்தை ஏற்படுத்தி, அதை மற்றொரு அயோத்தியாவாக பாஜக மாற்ற துடித்துக் கொண்டிருப்பதாக, கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.
“தேவையில்லாமல் மதக் கலவரத்தை தூண்டுகிறது பாஜக“
டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக மக்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் அங்குள்ள கோயிலிலும், சிக்கந்தர் தர்காவில் வழிபாடு நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
இப்படி, மத நல்லிணக்கத்தோடு மக்கள் அங்கே இருக்கக்கூடிய சூழலில், அவர்களிடையே மத குரோதத்தை உருவாக்கும் விதமாக பாஜக செயல்படுவதாக கனிமொழி குற்றம்சாட்டினார். 2014-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், தற்போது தேவையில்லாமல், எந்த மதத்திற்கும் சம்பந்தமில்லாத, ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றச் சொல்லி, இந்து மதத்திற்கு எதிராக, இந்து மக்களின் மன நிலையை புண்படுத்தும் நோக்கில், கோயிலுக்கு சம்பந்தமில்லாத ஒரு கல்லில் தீபத்தை ஏற்றக் கோரி, பிரச்னைகளை பாஜக உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு, திருப்பரங்குன்றத்தில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்க பாஜக நினைப்பதாவும், அங்குள்ள பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளதாகவும் சாடினார்.
“இன்னொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறது பாஜக“
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இதை இன்னொரு அயோத்தியாவாக மாற்ற பாஜக முயற்சி செய்து கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிவதாகவும் கனிமாழி எம்பி கூறினார். அதை அவர்களே வெளிப்படையாக சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடிய நிலையையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இப்படி பேசுவது, உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருக்கும் கிரண் ரிஜிஜு மிரட்டியது கண்டிக்கத்தக்கது என்றும் கனிமொழி கூறினார்.
அதோடு, நாடாளுமன்ற ஜீரோ ஹவரை(Zero Hour) பயன்படுத்தி, நீண்ட உரையை ஆற்றிய மத்திய அமைச்சர் எல். முருகன், பொய் பிரசாரம் செய்ததாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், மதக் கலவரங்களை ஏற்படுத்துவதே பாஜகவின் அரசியல் வியூகமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் அவர் என்ன பேசியபோதும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க தயாராக இல்லாததால், மதக் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிப்பதாக அவர் சாடினார். மேலும், தமிழ் மக்கள் மிகவும் தெளிவானவர்கள் என்றும், பாஜகவின் வியூகம் அவர்களிடம் செல்லுபடியாகாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கனிமொழி கூறினார்.





















