Kanhaiya Kumar : மிகப்பெரிய ஜனநாயக கட்சியின் நண்பனாகியுள்ளேன் - கன்ஹையா குமார்
அவர் கட்சிக்கு உண்மையாக இல்லை. அவரது அரசியல் அபிலாஷைகள் பற்றிய எதிர்பார்ப்புகளில் வெளிப்டைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை - டி.ராஜா
2024-ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் பல்வேறு அமைப்பு ரீதியிலான மாற்றங்களை முன்னெடுத்து வருகிறது. கட்சியை பலப்படுத்தும் விதமாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கன்ஹையா குமாரை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
கன்ஹையாவை வரவேற்று பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால், “கருத்து சுதந்திரத்தின் அடையாளமாக கன்ஹையா விளங்குகிறார். அடிப்படைவாதத்திற்கு எதிரான அவரது போராட்டம், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ்காரர்களை உற்சாகப்படுத்தும். கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி ஆகியோருடன் ஒன்றிணைந்து காங்கிரஸ் செயல்படும். நாட்டை ஆளும் அடிப்படைவாத, பாசிச சக்திகளை நம்மால் நிச்சயம் தோற்கடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய கன்ஹையா குமார், "வெளிப்படையான விவாதம், நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக பாரம்பரியங்கள் தாக்கி அழிக்கப்பட்டு வருகிறது. "உங்கள் எதிரிகளை மிகச் சரியாக தீர்மானிக்கும் தருவாயில், நண்பர்களை தானாக அமைத்துக் கொள்கிறீர்கள்" என்ற வாசகத்தை படித்திருக்கிறேன். மிகவும் பெரிய மற்றும் பழமையான ஜனநாயக கட்சியின் நண்பனாகியுள்ளேன்.
நாட்டைக் கட்டமைத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்குண்டு. காங்கிரஸ் இல்லையென்றால், இந்தியா என்கிற ஒரு நாடே இருந்திருக்காது என்ற கருத்தை பல இளைஞர்கள் வெளிபடுத்துகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. எதிர்க்கட்சி பலவீனமாக இருக்கும்போது தான், எதேச்சை அதிகாரம் உருவாகிறது. காங்கிரஸ் என்ற மிகப்பெரிய கப்பலை காப்பாற்றாவிட்டால், சிறிய படகுகள் உயிர்வாழாது" என்றும் தெரிவித்தார்.
சிபிஐ கட்சியில் இருந்து வெளியேறியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர்," நான் அக்கட்சிக்குள் பிறந்தவன். என்னுடைய எண்ண ஓட்டங்களை கூர்மைப்படுத்தியதில் அக்கட்சிக்கு முக்கிய பங்குண்டு. அதில், நான் பெருமை கொள்கிறேன். இருப்பினும், மகிழ்ச்சியற்ற தருணங்களை ஒதுக்கி வைத்து, நாட்டின் பாரம்பரியங்களைக் காப்பாற்ற போராட முன்வந்துள்ளேன். இடதுசாரி, வலதுசாரி என்ற கேள்வி தற்போது அர்த்தமற்றது" என்றும் தெரிவித்தார்.
டி.ராஜா கருத்து: கட்சியில் இருந்து கண்ணையா குமார் தன்னைத்தானே வெளியேற்றிக் கொண்டார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இடதுசாரி சிந்தாந்தங்கள் மீது கன்ஹையா கொண்டிருந்த நிலைப்பாட்டை கேள்வி எழுப்பிய அவர், "அவர் கட்சிக்கு உண்மையாக இல்லை. அவரது அரசியல் அபிலாஷைகள் பற்றிய எதிர்பார்ப்புகளில் வெளிப்டைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.
புத்தாக்கம் பெறுகிறதா காங்கிரஸ்? சமீப ஆண்டுகளில் ஜோதிராதித்யா சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி முதலான பிரபலமான முகங்களை இழந்துள்ள காங்கிரஸ் கட்சிக்குக் கன்ஹையா குமாரின் வருகை பலம் தருவதோடு, இளைஞர் ஒருவரின் முகத்தையும் பெற்றுத்தரும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் அடிப்படை சீர்த்திருத்தம் வேண்டி 23 அதிருப்தி காங்கிரஸ்காரர்கள் (G23) கடந்தாண்டு கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். காங்கிரஸ் கட்சிக்குள் பொதுவாக அதிருப்திக்கு இடம் இருந்தாலும், காந்தி குடும்பத்தின் தலைமைக்கு எதிரான நேரடி அதிருப்தி இதுவாகும். 1966 மற்றும் 1977களில் காங்கிரஸ் கட்சி பிளவை சந்தித்த போதும், அதிருப்தி உருவாக்கியது இந்திரா காந்தி.
தற்போது, கட்சிக்குள் மூத்தத் தலைவர்கள் முன்னிலைப்படுத்தவில்லை என்பதே G23 தலைவர்களின் முக்கிய அதிருப்தியாக உள்ளது. கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை எடுத்துவரும் நிலையில், காங்கிரஸ் அடிப்படை மாண்புகளுக்கு சமரசம் செய்து கொள்ளாத இளம் தலைவர்களை ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தி வருகின்றார்.
இதன் வெளிப்பாடாகவே, இளம் தலைவர்களின் ஒருவரானா அனுமுளா ரேவந்த் ரெட்டி-ஐ தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவையும் நியமித்தது. அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கயிருக்கும் குஜாரத் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக, ஹர்த்திக் படேலை நியமித்தது.