அடுத்த விக்கெட்டை இழக்கும் காங்கிரஸ்.. கமலாலயம் பக்கம் செல்லும் கமல்நாத்?
டெல்லிக்கு இன்று செல்ல உள்ள கமல்நாத், பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு கட்சி தாவுவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
அடுத்த விக்கெட்டை இழக்கிறதா காங்கிரஸ்?
சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
டெல்லிக்கு இன்று செல்ல உள்ள கமல்நாத், பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் பலர், இந்த வாரம் பாஜகவில் இணைந்தனர். கடந்த 12ஆம் தேதி, முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தினேஷ் அஹிர்வார் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விதிஷா ராகேஷ் கட்டாரே பாஜகவில் இணைந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கமல்நாத்தும் பாஜகவுக்கு தாவப்போவதாக வெளியாகியுள்ள செய்தி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை பலவீனம் ஆக்க பாஜக பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கமலாலயத்தில் ஒதுங்கும் கமல்நாத்:
மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜகவே ஆட்சி நடத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும், 15 மாதங்களில் அது கவிழ்ந்துவிட்டது.
கடந்த நவம்பர் மாதம், கமல்நாத் தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் தூக்கப்பட்டார். இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் அவர் சீட் கேட்டதாகவும் ஆனால் கட்சி தலைமை அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இச்சூழலில், சமூக வலைதளங்களில் சுயவிவர குறிப்பில் இருந்து காங்கிரஸை நீக்கியுள்ளார் கமல்நாத்தின் மகன் நகுல்நாத். பாஜகவில் கமல்நாத் இணைவாரா என மத்திய பிரதேச பாஜக தலைவர் வி.டி.சர்மாவிடம் நேற்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "நாங்கள் எங்கள் கதவுகளைத் திறந்து வைத்துள்ளோம். ஏனென்றால், காங்கிரஸ் ராமரைப் புறக்கணிக்கிறது.
இந்தியாவின் இதயத்தில் ராமர் இருக்கிறார் என்று நினைக்கும் மக்கள் காங்கிரஸில் உள்ளனர். காங்கிரஸ் அவரை அவமானப்படுத்தியதால், அதன் காரணமாக வேதனையடைந்தவர்கள், வருத்தப்பட்டவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும்" என்றார்.