Katchatheevu Festival: மார்ச்சில் கச்சத்தீவு திருவிழா: இவ்வளவு பக்தர்கள் மட்டுமே அனுமதி! இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3, 4ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Katchatheevu Festival : இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3, 4ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை எல்லையில் சுமார் 290 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கச்சத்தவு உள்ளது. இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் பயன்படுத்தவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கச்சத்தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலய, இருநாட்டு மீனவர்களுக்கு முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது.
கச்சத்தீவு பிரச்சனை:
கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகில் உள்ள ஒரு தீவாகும். இது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர் (1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.
1974 மற்றும் 1976 ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி இந்தியா அரசுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் ஒப்பந்த திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் அனுமதி இருக்கிறது. ஆயினும் 10 வருடங்களின் பின் இந்த அனுமதி இல்லாத நிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்.. 1960ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.
மார்ச்சில் கச்சத்தீவு திருவிழா
இந்நிலையில் இலங்கை அரசு சார்பாக கச்சத்தீவில் 2016ஆம் ஆண்டு தேவாலயம் திறக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சராசரியாக ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் யாழ்ப்பாணம் அரசு வளாகத்தில் உயர் அதிகாரிகள் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. திருவிழாக்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில்
நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்தியாவிற்கான இலங்கை தூதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, இதில் 2023ஆம் ஆண்டு மார்ச் 3,4ஆம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
எத்தனை பக்தர்கள் அனுமதி?
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இந்திய பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், இலங்கை பக்தர்கள் 10ஆயிரம் பேரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் கொரனோ நோய்த்தொற்று காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.