உச்சநீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள்...கொலிஜியம் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர்...!
கொலீஜியம் பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நியமித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சமீபத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், 5 நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியம் பரிந்துரைகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு இன்று உறுதி அளித்துள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, கொலீஜியம் பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நியமித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிவி சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நேற்றைய விசாரணையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, மத்திய அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, ஐந்து நீதிபதி நியமனத்திற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை மத்திய அரசு தாமதப்படுத்தியதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், "இது மிகவும் தீவிரமான பிரச்னை" என தெரிவித்தது.
கடந்த டிசம்பர் மாதம், மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இரண்டு நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இவர்கள் ஐவரும் பதவியேற்றுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். இதுதான் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை.