Jammu Kashmir: பழங்குடியினர் மர்ம மரணம்! ராணுவத்தினர் மீது எழும் சந்தேக பார்வை - காஷ்மீரில் பதற்றம்!
விசாரணை செய்வதற்காக பழங்குடியின குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த 8 பேரை ராணுவத்தினர் அழைத்து சென்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என பிரிக்கப்பட்ட 2 பகுதிகளுமே மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பழங்குடியினர் மர்ம மரணத்தில் ராணுவத்துக்கு தொடர்பா?
இச்சூழலில்தான், சமீபத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பழங்குடியின குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த 8 பேரை ராணுவத்தினர் அழைத்து சென்றனர்.
ஆனால், ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமான பயங்கரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, விசாரணை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட அப்பாவி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களில் 3 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதற்கு மத்தியில், ராணுவ முகாமில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
அதில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது ராணுவ வீரர்கள் என்று நம்பப்படும் சில நபர்கள், மிளகாய் தூள், தூவுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ, பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
காவல்துறை வழக்குப்பதிவு:
இந்த நிலையில், பழங்குடியினரின் மர்ம மரணம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்தது. இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவு 302ன் கீழ் பூஞ்ச் சூரன்கோட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெரும் அழுத்தம் வந்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே மச்சில் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததை அடுத்து, மாநில காவல்துறையும், ராணுவமும் இணைந்து அங்கு சென்று தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டுள்ள 46 பயங்கரவாதிகளில் 37 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 9 பேர் மட்டுமே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் பயங்கரவாதிகளைவிட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீரில் தற்போது சுமார் 130 பயங்கரவாதிகள் உள்ளதாகவும், இவர்களில் பாதி பேர் வெளிநாட்டவர்ள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.