Jammu and Kashmir Attack: திடீரென பதுங்கி தாக்கிய பயங்கரவாதிகள்.. 5 வீரர்கள் வீரமரணம்.. ஜம்மு-காஷ்மீர் அதிர்ச்சி சம்பவம்..
ஜம்மு - காஷ்மீரை அடுத்த தேரா கி கலி என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரை அடுத்த தேரா கி கலி என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இரண்டு ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது..?
ஜம்மு - காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரா கி கலி என்ற பகுதியில் நேற்று மாலை 3.45 மணியளவில், இரண்டு ராணுவ வாகனங்களை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். மேலும், 3 ராணுவ வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
முதலில் ராணுவ வாகனங்களை சுற்றுவளைத்த பயங்கரவாதிகளின் கும்பல் கையெறி குண்டுகளை வீசியதாகவும், அதன்பிறகு கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) பொறுப்பேற்றுள்ளது.
இந்த எதிர்பாராத தாக்குதல் நடந்த உடனையே இந்திய ராணுவத்தினர் களமிறங்கி தகுந்த பதிலடியும் கொடுத்துள்ளனர். ராணுவத்தினர் - பயங்கரவாதிகளுக்கு இடையேயான தாக்குதல் நள்ளிரவு வரை நீடித்ததாக கூறப்படுகிறது. மேலும், இரவு நேரத்தில், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி செல்லாத வகையில், அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத தாக்குதல்:
48 ராஷ்ட்ரிய ரைபிள்ஸின் இரண்டு வாகனங்கள் பஃப்லியாஸில் இருந்து தேரா கலிக்கு வந்து கொண்டிருந்தன. அதில் அன்று ராணுவ ஜிப்சி, மற்றொன்று ராணுவ டிரக். அப்போது, ரஜோரி-தன்னமண்டி-சூரன்கோட் சாலையில் உள்ள சவானியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் முதலில் கையெறி குண்டுகளை வீசினர். இரு வாகனங்களும் நின்றவுடன், அவர்களை நாலாபுறமும் சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர். பயங்கரவாதிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஆறு வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் சிதறிய ரத்தம்:
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பயங்கர காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த காட்சிகளில் ராணுவ வீரர்களின் உடைந்த ஹெல்மெட்களும், இரு ராணுவ வாகனங்களின் கண்ணாடியும் சிதறிக் கிடந்தன. அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்:
நாயக் பிரேந்திர சிங் (15 கர்வால் ரைபிள்), நாயக் கரண் குமார் (ஏஎஸ்சி), ரைபிள்மேன் சந்தன் குமார் (89 ஆயுதப் படைப்பிரிவு), ரைபிள்மேன் கௌதம் குமார் (89 ஆயுதப் படைப்பிரிவு) மற்றும் ஒரு ராணுவ வீரர் உட்பட மொத்தம் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.. வீரமரணம் அடைந்த ஐந்தாவது ராணுவ வீரரின் பெயர் தற்போது வரை ராணுவத்தால் வெளியிடப்படவில்லை.
26 மாதங்கள்.. நான்காவது சம்பவம்.. 21 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு:
கடந்த 26 மாதங்களில் பூஞ்சில் நடந்த நான்காவது பெரிய தீவிரவாத தாக்குதல் சம்பவம் இதுவாகும். கடந்த 2021 ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகள் தாக்குதலில் 21 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
- 11 அக்டோபர் 2021: சாம்ரெட் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
- 20 அக்டோபர் 2021: பததுரியனில் தேடுதல் நடவடிக்கையின் போது தாக்குதலில் ஆறு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதன்பிறகு, ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலை ஒன்றரை மாதங்கள் மூடி பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- 20 ஏப்ரல் 2023: பததுரியனில் ராணுவ வாகனத்தின் மீது முதலில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
- 21 டிசம்பர் 2023: ஜம்மு - காஷ்மீரை அடுத்த தேரா கி கலி என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.