"கல்வி வணிகமயமாக்குவதை ஏற்க முடியாது" சாட்டையை சுழற்றிய ஜெகதீப் தன்கர்
கல்வியும் மருத்துவமும் பணம் சம்பாதிப்பதற்கான தொழில்கள் அல்ல என குடியரசுத் துணைத் தலைவர் தன்கர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான நேரங்களில் நமது நலன்களுக்கு விரோதமான நாடுகளை நாம் ஆதரிக்க முடியாது எனவும் பொருளாதார தேசியவாதம் பற்றி நாம் ஒவ்வொருவரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
ஜெகதீப் தன்கர் என்ன பேசினார்?
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜெய்ப்பூரியா மேலாண் கல்வி நிறுவனத்தின் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், நமது பங்கேற்பின் காரணமாக, பயணம் அல்லது இறக்குமதி மூலம், அந்த நாடுகள் பொருளாதார ரீதியாக பயன் பெற நாம் அனுமதிக்க முடியாது என்றும் நெருக்கடி காலங்களில் அந்த நாடுகள் நமக்கு எதிராக உள்ளன என்றும் அவர் கூறினார்.
தேச பாதுகாப்பிற்கு உதவ ஒவ்வொரு தனிநபரும் அதிகாரம் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். தேசமே முதன்மையானது என்ற ஆழ்ந்த அர்ப்பணிப்பின் அடிப்படையில் அனைத்தும் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த மனநிலையை நாம் நமது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கற்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஆபரேஷன் சிந்தூரின் குறிப்பிடத்தக்க வெற்றிக்காக நமது ஆயுதப் படைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
"கல்வி வணிகமயமாக்குவதை ஏற்க முடியாது"
பஹல்காமில் நடந்த இரக்கமற்ற கொடூரத் தாக்குதலுக்கு இந்த நடவடிக்கை ஒரு சரியான பதிலடி என்றும் அவர் கூறினார். கல்வி, ஆராய்ச்சி குறித்து பேசிய அவர், கல்வியை வணிகமயமாக்குவதையும் பண்டமாக்குவதையும் ஏற்க முடியாது என்றார்.
This country cannot afford commercialisation and commodification of education. It is undeniable, and a matter of great concern, that this is present.
— Vice-President of India (@VPIndia) May 17, 2025
We must have change of mindset. As per our civilizational ethos, education and health are not areas to make money, but areas to… pic.twitter.com/32ZaQ5GP8N
நமது நாகரிக நெறிமுறைகளின்படி கல்வியும் மருத்துவமும் பணம் சம்பாதிப்பதற்கான தொழில்கள் அல்ல என்று அவர் கூறினார். இவை சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய சேவைகள் எனவும் சமூகத்திற்கான நமது கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும் எனவும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
ஜெய்ப்பூரியா மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவின் தலைவர் ஷரத் ஜெய்ப்பூரியா, ஜெய்ப்பூரியா மேலாண்மை நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீவத்ஸ் ஜெய்ப்பூரியா உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





















