Nambi Narayanan : உளவு பார்த்த வழக்கில் நம்பி நாராயணன் சிக்க வைக்கப்பட்டாரா? உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம்..!
உளவு பார்த்த வழக்கில் நம்பி நாராயணனை சிக்க வைத்ததாக ஐந்து முன்னாள் காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த 1994ஆம் ஆண்டு, இஸ்ரோவை உளவு பார்த்ததாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
உளவு பார்த்த வழக்கில் நம்பி நாராயணனை சிக்க வைத்ததாக ஐந்து முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இதை தொடர்ந்து, ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பி உள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் நான்கு வார காலத்திற்குள் முடிந்தவரை விரைவாக முடிவெடுக்க உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
உயர்நீதிமன்றம் இறுதியாக இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் வரை, இடைக்கால ஏற்பாடாக, விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைத்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வார காலத்திற்கு கைது செய்வதிலிருந்து உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியது.
இரண்டு முன்னாள் கேரள காவல்துறை அதிகாரிகள் எஸ். விஜயன் மற்றும் தம்பி எஸ். துர்கா, 1994 இல் இந்திய உளவுத்துறையில் அதிகாரிகளாக பணியாற்றிய கேரள முன்னாள் டிஜிபி சி.பி. மேத்யூஸ், குஜராத் முன்னாள் ஏடிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார், பி.எஸ். ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த 2 மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அடங்கிய அமர்வு நவம்பர் 28ஆம் தேதி ஒத்திவைத்தது.
இந்நிலையில், நீதிபதி எம்.ஆர். ஷா வழங்கிய உத்தரவில், "அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் அனுமதிக்கப்படுகின்றன. மேலே கூறப்பட்ட காரணங்களுக்காக, முன்ஜாமீன் வழங்கப்பட்ட தீர்ப்பு இதன் மூலம் ரத்து செய்யப்படுகின்றன.
தற்போது தெரிவித்துள்ள காரணங்களை மேற்கோள் காட்டி அனைத்து முன்ஜாமீன் மனுக்களையும் சட்டத்தின் படி திரும்பவும் புதிதாக விசாரிக்க வேண்டும். இருப்பினும், இரு தரப்பினரின் வழக்கின் தகுதிகள் குறித்து இந்த நீதிமன்றம் எதையும் தெரிவிக்கவில்லை.
இறுதியில் தகுந்த உத்தரவை உயர் நீதிமன்றமே பிறப்பிக்க வேண்டும். இந்த முன்ஜாமீன் மனுக்களை விரைவில் முடிவெடுத்து தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம்.
ஆனால், இந்த உத்தரவுகளைப் பெற்ற நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும். இந்த முன்ஜாமீன் மனுக்கள் அனைத்தையும் அறிவிக்குமாறு உயர்நீதிமன்றப் பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு வார காலத்திற்குள் இந்த வழக்கினை சம்பந்தப்பட்ட அமர்வு முன் எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் வழக்கை முடிவு செய்ய வேண்டும். விசாரணையின் போது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பல அம்சங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியிருப்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிகாட்டியிருந்தது.