Indigo Flight 'Mayday' Call: சென்னை சென்றுகொண்டிருந்த விமானத்தில் இருந்து வந்த ‘மேடே‘ அழைப்பு - அதன்பின் நடந்தது என்ன.?
சென்னை வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றிலிருந்து ‘மேடே‘ அழைப்பு வந்ததையடுத்து, விமான கட்டுப்பாட்டு அறை அதிர்ச்சி அடைந்தது. அதைத் தொடர்ந்து நடந்தது என்ன தெரியுமா.?

கவுஹாத்தியில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து, விமானிகள் மேடே அழைப்பு விடுத்ததையடுத்து, அந்த விமானம் பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னை வந்த இண்டிகோ விமானத்திலிருந்து வந்த ‘மேடே‘ அழைப்பு - பதறிய பயணிகள்
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து 168 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட இண்டிகோ ஏர்பஸ் விமானம், வானத்தில் பறந்துகொண்டிருந்த போது, திடீரென எரிப்பொருள் தீர்ந்துள்ளது. இதை அடுத்து, அந்த விமானத்தின் விமானி "மேடே" என அறிவித்ததை தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலுடன், அந்த விமானம் அவசரமாக பெங்களூருவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்ப்பு
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சம்பவத்தில், விமானி தக்க நேரத்தில் ‘மேடே‘ அழைப்பு விடுத்து, உரிய நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 241 பயணிகள் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி "மேடே" என அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அதற்கு கட்டுப்பாட்டு அறை பதிலளிக்கும் முன்னரே, விமானம் விழுந்து வெடித்துச் சிதறிவிட்டது.
"மேடே" என்பது தொழில்நுட்ப கோளாறு, எரிப்பொருள் காலி உள்பட விமானம் இயக்க முடியாமல் போய், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தருணத்தில், அந்த விமானத்தின் விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு "மேடே" என தகவல் அனுப்புவார்.
அசம்பாவிதம் எப்படி தவிர்க்கப்பட்டது.?
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சில நாட்களில், கடந்த வியாழக்கிழமை அன்று கவுஹாத்தியில் இருந்து- சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், பெங்களூருவிற்கு 35 மைல் தொலைவில் வந்துகொண்டிருந்த போது எரிப்பொருள் தீர்ந்ததை அடுத்து, விமானிகள் 'மேடே' என்று விமான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்தனர்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அபாய அழைப்பு வந்தவுடன், அவர்கள் துரிதமாக செயல்பட்டு, பெங்களூரு விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பி, அங்குள்ள விமான ஊழியர்கள் தயார் நிலையில் இருந்துள்ளனர். மேலும், மருத்துவ மற்றும் தீயணைப்புப் படை வீரர்களும் பெங்களூரு விமான நிலையத்தில் தயாராக இருந்துள்ளனர். பின்னர், விமானம் இரவு 8:20 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டுள்ளனர். இதனால், பயணிகள் பெருமூச்சுவிட்டனர்.
அந்த இண்டிகோ விமானத்தின் இரு விமானிகளையும் விசாரணை முடியும் வரை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இண்டிகோ நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாகும். இந்நிறுவனம் தினசரி 2 ஆயிரம் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.





















