Rahul Gandhi: 40 பேர் உயிரிழப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்களின் நிலை? ராகுல் காந்தி கோரிக்கை
Rahul Gandhi: குவைத் தீ விபத்தை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்களின் நிலை என்னவென, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Rahul Gandhi: குவைத்தில் தனியார் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் தீ விபத்து - 40 இந்தியர்கள் உயிரிழப்பு:
குவைத்தில் தனியார் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் உயிரிழந்தனர். மொத்தமாக இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள வெளியுறவு இணையமைச்சர் குவைத் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இரங்கல்:
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்” என குறிப்பிட்டுள்ளார்.
Shocked and saddened by the horrific news of the death of more than 40 Indians in a fire in Kuwait City.
— Rahul Gandhi (@RahulGandhi) June 12, 2024
My deepest condolences go out to the bereaved families, and I wish a speedy recovery to all those injured.
The condition of our workers in the Middle East is a serious…
மத்திய அரசுக்கு வேண்டுகோள் - ராகுல் காந்தி
மேலும், “இந்திய அரசு, குவைத் அரசுடன் இணைந்து பணியாற்றி அங்குள்ள நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுத்துறை நம்பிக்கை:
குவைத் விபத்து தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்கும், இறந்தவர்களின் சடலங்களை விரைவாக திருப்பி தாயகம் கொண்டு வருவதற்கும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அவசரமாக குவைத் செல்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டது தொடர்பாக தகவல்கள் அறிய, +965-65505246 என்ற அவசர எண்ணை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த தூதர்:
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மீட்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, 30க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் அல்-அதான் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.