"மறுபிறவி மாறி இருக்கு" வங்கதேச சிறையில் 37 ஆண்டுகள் தவித்த இந்தியர்.. தாயகம் திரும்பிய நெகிழ்ச்சி!
பங்களாதேஷ் சிறைகளில் 37 ஆண்டுகள் தவித்த இந்தியர், தாயகம் திரும்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
வங்கதேச சிறைகளில் 37 ஆண்டுகள் வாடிய திரிபுரா மாவட்டத்தை சேர்ந்த நபர், தாயகம் திரும்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன் ஸ்ரீமந்தபூர் நில சுங்க நிலையம் வழியாக ஷாஜகான் என்பவர் இந்தியா திரும்பினார்.
37 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பிய இந்தியர்: சோனமுராவில் எல்லைக் கிராமமான ரவீந்திரங்கரையைச் சேர்ந்தவர் ஷாஜகான். கடந்த 1988 ஆம் ஆண்டு, வங்கதேசம் கொமிலாவில் உள்ள தனது மனைவியின் உறவினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது, அவர் சென்ற வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக அண்டை நாட்டிற்குள் நுழைந்ததற்காக அவரைக் கைது செய்தனர்.
தனது அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட ஷாஜகான், "25 வயதில், கொமிலா நீதிமன்றத்தால் எனக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. என் தண்டனையை முடித்த போதிலும், நான் விடுவிக்கப்படவில்லை. மேலும் 26 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். மொத்தம், 37 ஆண்டுகளில் சிறையில் இருந்தேன்" என்றார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தார் பேசுகையில், "ஷாஜகான் எதிர்கொள்ளும் அநீதி சில மாதங்களுக்கு முன்பு ஊடக அறிக்கைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அவரது அவல நிலை ஜாரா அறக்கட்டளையின் கவனத்தை ஈர்த்தது.
"மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை" ஜாரா அறக்கட்டளையின் தலைவரான மௌஷாஹித் அலி, ஷாஜகானின் விடுதலைக்காக துரித நடவடிக்கை எடுத்தார். பல சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஷாஜகான் இறுதியாக நேற்று ஸ்ரீமந்தபூர் எல்சிஎஸ்ஸில் எல்லை பாதுகாப்பு வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்" என்றார்கள்.
தற்போது 62 வயதாகும் ஷாஜகான், இளமையாக இருந்தபோது வங்கதேசம் சென்றார். அப்போது, அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். வீடு திரும்பிய ஷாஜகானை அவரது மகன் முதன்முறையாக நேரில் பார்த்தார். இதுகுறித்து பேசிய ஷாஜகான், "என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன்.
இது எனக்கு மறுபிறப்பு போன்றது. இந்த வாழ்நாளில் நான் பிறந்த ஊருக்குத் திரும்புவேன் என்று நினைக்கவே இல்லை. ஜாரா அறக்கட்டளைதான் என்னை வீட்டிற்கு அழைத்து வந்தது. என் வாழ்நாள் முழுவதும் அந்த அமைப்புக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். போலீஸ் காவலில் இருந்த முதல் 14 நாட்களில் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தேன்" என்றார்.