Train Accidents: தடுமாறுகிறதா மத்திய அரசின் ரயில்வே துறை?.. கடந்த 6 மாதங்களில் 4 விபத்துகள்.. தீர்வு என்ன?
இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் 4 ரயில் விபத்துகள் நேர்ந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் 4 ரயில் விபத்துகள் நேர்ந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே:
உலகில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக நான்காவது மிகப்பெரிய ரயில் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. அதன்படி 3,000க்கும் மேற்பட்ட ரயில்கள் வாயிலாக, சராசரியாக 13 ஆயிரத்து 500 பயணியர் ரயில்கள், 8,500 சரக்கு ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இந்திய போக்குவரத்து கட்டமைப்பில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் காரணமாகவே ரயில் விபத்துகளால், ஆண்டுக்கு சராசரியாக 50 முதல் 300 பேர் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.
ரயில் விபத்துகள் - மத்திய அரசின் திட்டங்கள்:
குறிப்பாக ரயில்களில் பயணிப்போரை விட, ரயில் பயணத்தை சாராத பொதுமக்கள், ரயில் விபத்துகளில் அதிகம் உயிரிழக்கும் சூழல் உள்ளது. அதாவது, ஆளில்லா கடவுப் பாதைகளில் ஏற்படும் விபத்துகள் அதிகம். இத்தகைய உயிரிழப்புகளை தடுக்கவே ரயில்வே துறைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2013 - 14ல் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை 63 ஆயிரத்து 363 கோடி ரூபாய். ஆனால், நடப்பு நிதியாண்டில் 2.4 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. என்னதான் நிதி ஒதுக்கினாலும் பணிகள் முறையாக நடைபெற்றால் தான், திட்டங்களின் பலன்களை பொதுமக்களால் அனுபவிக்க முடியும். ஆனால், கடந்த ஆறே மாதங்களில் 4 ரயில் விபத்துகள் நடைபெற்று இருப்பது, மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை உணர்த்துகிறது.
நடப்பாண்டில் நேர்ந்த விபத்துகள்:
01. ஜனவரி 2023ல் மார்வார் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3:27 மணிக்குப் புறப்பட்ட ஐந்து நிமிடங்களில், சூர்யநாக்ரி விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர், அதிர்ஷ்டவசமாக யாரும் இந்த விபத்தில் உயிரிழக்கவில்லை.
02. ஏப்ரல் 2023ல் எலத்தூர், கோழிக்கோடு, கண்ணூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில், நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்ததால் எட்டு பயணிகள் தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று பேர் ரயில் பாதையில் இறந்து கிடந்தனர்.
03. கடந்த மே மாதம் 15ம் தேதி பெங்களூரு நோக்கிச் சென்ற சென்னை - பெங்களூரு டபுள் டெக்கர் விரைவு ரயிலின் ஒரு பெட்டி காலை 11:30 மணியளவில் பிஸ்நத்தம் நிலையம் அருகே தடம் புரண்டது.
04. இந்த நிலையில் தான் ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நேற்று நடைபெற்ற 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கோர விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை:
இந்திய ரயில்வே துறையில் பாதுகாப்பு அம்சங்களும், தொழில்நுட்ப உதவிகளும் அதிகளவில் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு பேசுவதோடு, தேஜாஸ் போன்ற அதி நவீன விரைவு ரயில்களெல்லாம் பயன்பாட்டுக்கு வருகின்றது. ஆனாலும் கடந்த 6 மாதங்களில் 4 விபத்துகள் நடந்துள்ளன. எனவே, விரைவான பயணத்தைவிட பாதுகாப்பான பயணமே பொதுமக்களுக்கு தேவை என்பதே அரசு உணர வேண்டும் என்பதே, பல தரப்பினரின் வலியுறுத்தலாக உள்ளது.