''எங்கெங்கும் மக்கள் கூட்டம்.. இது ஆபத்து..'' மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கும் மருத்துவ சங்கம்
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மாநில அரசுகள் மேற்கொண்ட ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
இருப்பினும், உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும், மருத்துவ நிபுணர்களும் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர்.
இந்த சூழலில், இந்திய மருத்துவர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ நாடு முழுவதும் இப்போதுதான் கொரோனா இரண்டாவது அலையில் இருந்து மெல்ல மீண்டு வருகிறோம். அரசாங்கமும், மருத்துவ முன்களப் பணியாளர்களும் இணைந்து இதனை சாத்தியப்படுத்தியிருக்கின்றன. ஆனால், இப்போது அரசும், மக்களும் காட்டும் அலட்சியம் அச்சமூட்டுவதாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், அதை தவிர்க்கவும் முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் அலட்சியம் காட்டப்படுவது அச்சமூட்டுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுலா தலங்களில் கூட்டம் குவிந்து வருகிறது. புனித தலங்களிலும் மக்கள கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
சுற்றுலாவும், புனித பயணங்களும், மதக்கூடல்களும் முக்கியமான ஒன்று. ஆனால், இவை தற்காலிகமாக தள்ளிவைக்கப்படலாம். அனைத்திற்கும் அனுமதி கொடுத்து மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதிப்பது ஆபத்தானது. அதுவும், நாட்டில் பலரும் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளாத நிலையில், இதுபோல ஒன்று கூடுவதற்கு அனுமதி அளித்தால் கொரோனா மூன்றாம் அலை அதிகவேகமாக பரவ இவை காரணமாகிவிடும்.
தொற்று பாதிப்புகளின்படி கடந்த காலங்கள், சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாதது. எந்த நேரத்திலும் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும். இப்படியான சூழ்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகால படிப்பினைகள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது, கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். “
இவ்வாறு இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டாம் அலை காரணமாக நாட்டில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் புதியதாக 37 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 764 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்கனவே மகாராஷ்ட்ரா, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில், மூன்றாவது அலை தவிரக்க முடியாதது என்ற மருத்துவ சங்கத்தின் எச்சரிக்கை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.