"இந்திய பொருள்கள்.. சர்வதேச பிராண்டுகளாக உருவாகி வருகின்றன" பெருமையாக சொன்ன மோடி!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் இப்போது சர்வதேச பிராண்டுகளாக உருவாகி வருகின்றன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார். பின்னர் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "கடந்த பத்தாண்டுகளில் வாரணாசியின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வேகத்தைக் கண்டுள்ளது. காசி தனது வளமான பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையான அடிகளை எடுத்து வைக்கும் அதே வேளையில், நவீனத்தையும் அழகாக ஏற்றுக்கொண்டுள்ளது.
பிரதமர் மோடி என்ன பேசினார்?
இன்று காசி பழமையின் சின்னமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்கிறது. இது இப்போது பூர்வாஞ்சலின் பொருளாதார வரைபடத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் பகவான் மகாதேவரால் வழிநடத்தப்பட்ட அதே காசி - இன்று, பூர்வாஞ்சல் பிராந்தியம் முழுவதற்கும் வளர்ச்சி என்ற ரதத்தை இயக்குகிறது!
சிறிது நேரத்திற்கு முன்பு, காசி மற்றும் பூர்வாஞ்சலின் பல்வேறு பகுதிகள் தொடர்பான எண்ணற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உள்கட்டமைப்பு திட்டங்கள், ஒவ்வொரு கிராமத்திற்கும், வீட்டிற்கும் குழாய்வழிக் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கான பிரச்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஒவ்வொரு பிராந்தியம், ஒவ்வொரு குடும்பம் மற்றும் ஒவ்வொரு இளைஞருக்கும் வசதிகளை மேம்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவை இதில் அடங்கும்.
இந்த முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றும் பூர்வாஞ்சலை வளர்ச்சியடைந்த பிராந்தியமாக மாற்றுவதற்கான பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களாக செயல்படும். காசியில் உள்ள ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளால் பெரிதும் பயனடைவார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில், நாங்கள் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிக்கவில்லை, நோயாளிகளின் கண்ணியத்தையும் உயர்த்தியுள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டம் எனது ஏழை சகோதர சகோதரிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்தத் திட்டம் மருத்துவ சிகிச்சையை வழங்குவதை விடவும் அதிகமாகச் செயல்படுகிறது. இது கவனிப்புடன் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. உத்தரப்பிரதேசத்தில் லட்சக்கணக்கான மக்களும், வாரணாசியில் மட்டும் ஆயிரக்கணக்கானோரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
"சர்வதேச பிராண்டுகளாக உருவான இந்திய பொருள்கள்"
ஒவ்வொரு சிகிச்சை நடைமுறையும், ஒவ்வொரு அறுவை சிகிச்சையும், நிவாரணத்தின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறித்துள்ளது. ஆயுஷ்மான் திட்டம் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
ஏனென்றால் "உங்கள் சுகாதாரம் இப்போது எங்கள் பொறுப்பு" என்று அரசு அறிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், உத்தரப்பிரதேசம் அதன் பொருளாதார நிலப்பரப்பையும் முன்னோக்கையும் மாற்றியுள்ளது. உ.பி. என்பது வெறுமனே சாத்தியக்கூறுகளின் நிலம் மட்டுமல்ல; இது இப்போது உறுதிப்பாடு, வலிமை மற்றும் சாதனைகள் நிறைந்த பூமியாக மாறி வருகிறது.
இன்று, "இந்தியாவில் தயாரியுங்கள்"என்ற சொற்றொடர் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இப்போது சர்வதேச பிராண்டுகளாக உருவாகி வருகின்றன. பல உள்ளூர் தயாரிப்புகள் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளன.
புவிசார் குறியீடு என்பது வெறும் முத்திரை அல்ல; இது ஒரு பிராந்தியத்தின் தனித்துவமான அடையாளத்தின் சான்றிதழாகும். ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வேரூன்றியுள்ளது என்பதை இது குறிக்கிறது. புவிசார் குறியீடு எங்கு பயணித்தாலும், அது உலகளாவிய சந்தைகளுக்கான நுழைவாயிலைத் திறக்கிறது" என்றார்.

