Air Force Day 2022 : இந்திய விமானப்படை தினம்… ஏன் இன்று கொண்டாடப்படுகிறது? என்ன வரலாறு?
இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8 அன்று கொண்டாடப்பட காரணம், இது 1932 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் துணைப் படையாக இந்திய விமானப்படை உயர்த்தப்பட்ட தேதியாகும்.
இந்திய விமானப்படைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் இது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து மாவீரர்களின் தன்னலமற்ற பங்களிப்பை நினைவுபடுத்துகிறது.
இந்திய விமானப்படை தினம் 2022
இந்திய விமானப்படை உலகின் மிகப்பெரிய விமானப்படைகளில் தரவரிசையில் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்த இடத்தை பிடிக்க உதவிய விமானப்படை வீரர்கள் மற்றும் சாகச செயல்கள் போற்றப்படுகின்றன. இந்த நாள், நாட்டிற்கு உதவிய விமானப்படையின் மைல்கல் பணிகளையும், இந்தத் துறையில் இந்தியா வெளிப்படுத்திய சிறப்பையும் அங்கீகரிக்கிறது. இந்த நாளின் கொண்டாட்டங்களில் விமானப்படை வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அதிகாரிகளின் வீரத்தை காட்டவும், பல ஆண்டுகளாக நாடு கட்டியெழுப்பிய நற்பெயரைக் வெளிப்படுத்தவும் ஃபிளையிங்-பாஸ்ட் (விமான அணிவகுப்பு) நடைபெறும். இந்த முக்கியமான நாளை இந்தியா கொண்டாடும் தினத்தில், இதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.
இந்திய விமானப்படை தினம் 2022 - தேதி மற்றும் வரலாறு
2022 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8 (இன்று) அன்று கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இது 1932 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் துணைப் படையாக இந்திய விமானப்படை உயர்த்தப்பட்ட தேதியாகும். இது சிறியதாகத் தொடங்கினாலும், காலப்போக்கில் வலிமையான ஒன்றாக மாற்றிக்காட்டினர் இந்திய விமானப் படை வீரர்கள்.
விமானப்படை தொடக்கம்
இந்திய விமானப்படை தொடங்கும் போது, அதில் ஆறு RAF பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் 19 விமானப் படை வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் நான்கு வெஸ்ட்லேண்ட் வாபிடி IIA இராணுவ ஒத்துழைப்பு விமானங்கள் இரண்டும் இருந்தன. அதன் பிறகு இந்திய விமானப்படையை கட்டமைக்க நிறைய நேரம் எடுத்தது. மேலும் இரண்டாம் உலகப் போரில் இந்தியா பங்கேற்ற பிறகு, அது ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் என்று அழைக்கப்பட்டது. பின்னர், 1950க்குப் பிறகு, இந்திய விமானப்படை என்று பெயர் பெற்றது.
முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்
இந்த நாள் இந்திய விமானப்படையின் வலிமை மற்றும் காலப்போக்கில் பணியாளர்கள் செய்த தியாகங்களை பாராட்டுவதற்காக கொண்டாடப்படுவதாகும். இந்த நாள் முழு தேசத்தையும் ஒன்றிணைத்து, விமானப்படையின் வரலாற்றையும் அதன் பயணத்தையும் நினைவூட்டுகிறது. 1950 முதல், IAF ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத் மற்றும் ஆபரேஷன் கேக்டஸ் போன்ற முக்கிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மேலும் இந்தியா பாகிஸ்தானுடன் பல மோதல்களில் ஈடுபட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளிலும் பங்கு கொள்கிறது. இன்றைய கொண்டாட்டங்களில் வழக்கம் போல ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப் போர்வீரர்களைக் காட்டும் அணிவகுப்பு இடம்பெறும். இந்த ஆண்டு, சண்டிகரில் சுமார் 80 விமானங்களுடன் பறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.