காங்கிரஸ், பாஜகவை ஒருங்கிணைத்த கிரிக்கெட்! உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சுவாரஸ்யம்!
விளையாட்டு என்பது மதம், சாதி, இனம் என அனைத்தையும் கடந்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றது. ஆனால், அதையும் தாண்டி எதிர் எதிர் துருவங்களாக திகழும் கட்சிகளை கிரிக்கெட் ஒருங்கிணைத்துள்ளது.
காங்கிரஸ், பாஜகவை ஒருங்கிணைத்த கிரிக்கெட்:
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசியின் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் ஆரவாரத்துடன், பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளன்று ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. விளையாட்டு என்பது மதம், சாதி, இனம் என அனைத்தையும் கடந்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றது. ஆனால், அதையும் தாண்டி எதிர் எதிர் துருவங்களாக திகழும் கட்சிகளை கிரிக்கெட் ஒருங்கிணைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
'கம் ஆன் டீம் இந்தியா' என எக்ஸ் வலைதள பக்கத்தில் பாஜக வெளியிட்ட பதிவுக்கு காங்கிரஸ் பதில் அளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், "உண்மைதான். இந்தியா வெற்றி பெறும்" என காங்கிரஸ் பதிவிட்டுள்ளது. இரண்டு கட்சிகளையும் கிரிக்கெட் ஒருங்கிணைத்ததாக சிலர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணியா? இந்திய அணியா?
ஆனால், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி வெல்லும் என்ற பொருள்படும் வகையில் காங்கிரஸ் பதிவிட்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கு, ஆஸ்திரேலியாவை பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி களம் இறங்கியது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
True that!
— Congress (@INCIndia) November 19, 2023
JEETEGA INDIA 🇮🇳 https://t.co/nLEInv14WR
இருப்பினும், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். 2 சிக்ஸர்களை அதிரடியாக பறக்கவிட்ட அவர், 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 47 ரன்கள் எடுத்திருந்தார். 3 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார். கில்லின் விக்கெட்டை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி 63 பந்துகளில் 54 ரன்களை எடுத்திருந்தபோது, தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
அதேபோல, 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ், கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நிதானமாக ஆடிய கே.எல். ராகுல், 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுக்க 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்துள்ளது. எனவே, உலகக் கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியா அணிக்கு 241 ரன்கள் தேவைப்படுகிறது.