(Source: ECI/ABP News/ABP Majha)
Gaganyaan Mission : ககன்யான் மிஷன் சோதனை அடுத்த ஆண்டு தொடக்கமா? இஸ்ரோவின் அதிரடி அறிவிப்பு..
இந்தியாவின் முதல் மனித விண்வெளித் திட்டமான ககன்யான் திட்டத்தின் சோதனை விமானங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2023-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளன
2023-ம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் தன் முதல் ஏவுகணையான ககன்யானை இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவடையும் இந்த வருடம் செலுத்த இருந்தது. ஆனால் தற்போது அது அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரூ. 10,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் மூலம், 3 பேர் கொண்ட இந்தியக் குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்புகளால் உருவாகும் ககன்யானின் பகுதிகளை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது. முக்கிய பகுதிகள் மிக கவனத்துடன் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு பல கட்ட சோதனைகள் செய்யப்பட்டு விண்வெளி ஆய்வகத்திற்கு ஒப்படைக்கப்படுகிறது.
ககன்யான் திட்டத்துக்கான பணிகள் மூன்று விண்வெளி விமானங்களை உள்ளடக்கியது: பயணிகளின் பாதுகாப்பை சோதிக்க இரண்டு ஆளில்லா 'அபார்ட் மிஷன்கள்', அதைத் தொடர்ந்து மனிதர்கள் கொண்ட விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் தோல்வியுற்றால் நடுவானில் இருந்து விமானத்தில் இருந்து தப்பிக்க உதவும் அமைப்புகளை பரிசோதிப்பதற்காகவே அபார்ட் மிஷன் ஏவ உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கான தொடர்ச்சியான சோதனை விமானங்களைத் தொடங்கும் என்று இஸ்ரோ அதிகாரி கூறியுள்ளார். ககன்யான் மனித விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை மூன்று நாட்களுக்கு பூமியின் புவி வட்டார சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும் ஹெவி லிஃப்ட் சினூக் ஹெலிகாப்டர் (heavy lift chinook helicopter) மற்றும் சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் ஆகியவற்றை சோதனைக்கு அனுப்பவும் விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையம் (ISRO's Human Space Flight Centre) இயக்குனர் ஆர் உமாமகேஷ்வரன் கூறியுள்ளார்.
17 முறை சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன எனவும் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பின் வடிவமைப்பை முடித்துள்ளனர், இது விண்வெளி வீரர்கள் பூமியைச் சுற்றி வரும்போது சுற்றுப்புற வாழ்க்கை நிலைமைகளை உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன், குறைந்தது 17 வெவ்வேறு சோதனைகளை இஸ்ரோ அடுத்த ஆண்டு திட்டமிடுகிறது. விண்வெளிக் காப்ஸ்யூலுக்கு வெளியே வெப்பநிலை 2000 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும்போது, விண்வெளி வீரர்கள் வசதியாக உணர வேண்டும் என்பதால், சுற்றுப்பாதை சுற்றுச்சூழலுக்கு கட்டுப்பாட்டு அமைப்பை வடிவமைக்கும் பணி சவாலாக உள்ளது.
"விண்வெளி வீரர்கள் அமர்ந்து பறக்க வேண்டிய க்ரூ மாட்யூல் (crew module) முடிந்து, புனையமைப்பு பணி நடந்து வருகிறது. ஆறு மாதங்களுக்குள் தயார் செய்யப்படும். வீரர்களுக்கு ஏற்றவாறு "நாம் ஆக்ஸிஜனை வழங்க வேண்டும், கார்பன் டை ஆக்சைடை அகற்ற வேண்டும், ஈரப்பதத்தை அகற்ற வேண்டும், வெப்பநிலையை பராமரிக்க வேண்டும், மேலும் தீ விபத்துக்கான சூழல் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது எந்த நாடும் நமக்கு வழங்காத மிகவும் சிக்கலான தொழில்நுட்பமாகும்,சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த விஞ்ஞானி கூறினார்.