India Pakistan War: மீண்டும் அத்துமீறிய பாக்கிஸ்தான் ; சுட்டு விழ்த்தபட்ட ட்ரோன்கள்... இருளில் முழ்கிய ஜம்மு காஷ்மீர்
இந்தியாவின் எல்லை பகுதிகளான அமிர்தசரஸ், பதான்கோட், கார்கில், பாட்டியாலா,ராஜஸ்தானின் பார்மர் , ஜெய்சால்மர் , பஞ்சாபின் பிரோஸ்பூர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது

இந்தியா : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், தாக்குதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல், இந்திய ராணுவத் தளபதி உடன் மாலை 3.35 மணிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாகத் தெரிவித்தார்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் இன்று மாலை 5 மணி முதல் அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்
இந்நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று மாலை 5 மணி முதல் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரின் கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்ஷேராவில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. எனினும் இந்த தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது. காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தானின் ட்ரோனை இந்தியா முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதல் நிறுத்த முடிவு என்ன ஆனது ?
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கு அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதல் நிறுத்த முடிவு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஸ்ரீநகர் அருகே மீண்டும் வெடி சத்தம் கேட்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறலை அடுத்து காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் எல்லை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்
குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலும் ட்ரோன்கள் பறந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பதற்றமடைய வேண்டாம் என்றும் அம்மாநில அமைச்சர் ஹரிஷ் சிங்வி கேட்டுக்கொண்டுள்ளார். புரிந்துணர்வு முடிவை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்துவதால் எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இதனால் இந்தியாவின் எல்லை பகுதிகளான அமிர்தசரஸ், பதான்கோட், கார்கில், ஜெய்சால்மர், பாட்டியாலா ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் அம்பாலாவில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை காற்றில் பறக்கவிட்ட பாகிஸ்தான்!
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது; சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். ராஜஸ்தானின் பார்மர் , ஜெய்சால்மர் , பஞ்சாபின் பிரோஸ்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.





















