India Coronavirus Cases Today: 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.73 லட்சம், நேற்று 2.59 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.95 லட்சமாக உயர்ந்தது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 95ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89-இல் இருந்து ஒரு கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130- ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 530-ல் இருந்து ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 553-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 8 ஆயிரத்து 582-இல் இருந்து ஒரு கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 39 ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 85.56 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.18 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21 லட்சத்து 57 ஆயிரத்து 538-ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 561 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 13 கோடியே ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16 லட்சத்து 39 ஆயிரத்து 357 மாதிரிகளும், இதுவரை 27 கோடியே 10 லட்சத்து 53 ஆயிரத்து 392 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி தொடர்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அதில்,"கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக மீண்டும் போராடிவருகிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையின்போது இறந்தவர்களின் குடும்பத்தின் ஒருவனாக அவர்களின் துக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன். முதலில் இந்தியாவில் கொரோனா நோய் தொற்று எதிராக தீவிரமாக போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்கள் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரும் தங்களின் உயிரை பணயம் வைத்து பிற மக்களை காப்பாற்றி வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவது ஆக்சிஜன் வாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சியை எடுத்துவருகின்றன. இந்த ஆண்டில் தொடக்கத்திலிருந்த அளவைவிட தற்போது ஆக்சிஜன் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு முதல் நாட்டின் ஃபார்மா நிறுவனங்கள் அனைத்தும் வேகமாக செயல்பட்டு வருகின்றன. அதேபோல் தடுப்பூசி தயாரிப்பதிலும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதிலும் தீவிர முனைப்புகாட்டி வருகிறோம். இதுவரை 12 கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
நேற்று மத்திய அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்துள்ளது. அதாவது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் முறை தொடரும்.
பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் உயிர்களை காக்கவேண்டும் என்பதே அரசின் முக்கிய கடமையாக உள்ளது. கொரோனா பாதிப்பு முதலில் ஏற்பட்டபோது இதற்கு என்ன சிகிச்சை என்று யாருக்கும் தெரியாது. எனினும் நமது மருத்துவர்கள் விரைவில் கொரோனாவிற்கு ஏற்ற சிகிச்சை முறைகளை செய்து உயிர்களை காப்பாற்றினர். முகக்கவசம் முதல் வென்ட்டிலேட்டர் வரை அனைத்தையும் நாம் சிறப்பாக தயாரித்துள்ளோம். எனவே கொரோனா பாதிப்பு எதிராக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மக்கள் யாரும் பயப்படவேண்டாம். மேலும் தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு செல்லும். தற்போது இருக்கும் சூழலில் முழு ஊரடங்கு தேவையில்லை. எனினும் முமு ஊரடங்கு நிலைக்கு மீண்டும் செல்லாமல் இருப்பதை மக்கள்தான் தடுக்க வேண்டும். ஆகவே தேவையில்லாமல் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும். தற்போது நாட்டு மக்கள் தைரியத்துடனும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். தற்போது இருக்கும் நிலையை விரைவில் மாற்ற அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" என்றார்.