Sharad Pawar: பாஜகவுக்கு சிக்னல் அனுப்புகிறாரா சரத் பவார்? தர்ம சங்கடத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி..நடந்தது என்ன?
மகாராஷ்டிர அரசியலில் தொடர் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஒரே மேடையை சரத் பவாரும் பிரதமர் மோடியும் பகிர்ந்து கொள்ளவிருப்பது பல்வேறு விதமான சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கலந்து கொள்ள உள்ளார்.
அதேபோல, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அரசியலில் தொடர் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஒரே மேடையை சரத் பவாரும் பிரதமர் மோடியும் பகிர்ந்து கொள்ளவிருப்பது பல்வேறு விதமான சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, சரத் பவார் கலந்து கொள்ளவிருப்பது, இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் தர்மசங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்கக் கோரி இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தை புரட்டி போட்டு வரும் நிலையில், சரத் பவாரின் இந்த செயல் மக்கள் மத்தியில் தவறான தோற்றத்தை அளிக்கும் என மற்ற எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
சரத் பவார் மீது அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள்:
நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மோடியுடன் சரத் பவார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருப்பது குறித்து பிராந்திய கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் இந்த கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். இதை தொடர்ந்து, தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவோ அல்லது வேறு தலைவரோ சரத் பவாரிடம் பேசி, அவரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இருந்து தவிர்க்க அறிவுறுத்துமாறு சிலர் கூறியுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட வந்தனா சவான், இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல, வரும் திங்கள்கிழமை, மக்களவையில் டெல்லி அவசர சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. செவ்வாய்கிழமை, அது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தோற்கடிக்க வேண்டும் என்றால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்ள வேண்டும்.
எனவே, மோடிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்லாமல் டெல்லியில் இருந்து கொண்டு மசோதாவுக்கு எதிராக சரத் பவார் வாக்களிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினர் விரும்புகின்றனர்.
மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், சரத் பவாரின் ஒப்புதலை மீறி பாஜக - சிவசேனா அரசாங்கத்தில் இணைந்து துணை முதலமைச்சராக பதவியேற்று கொண்டது அம்மாநில அரசியலில் சமீபத்தில் புயலை கிளப்பியது. அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
அஜித் பவாரை தவிர மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் மோடிக்கு விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.