Gujarat Elections: 10 ஆயிரம் டெபாசிட் பணம் : சில்லறையாகவே செலுத்திய சுயேட்சை வேட்பாளர்..! குஜராத் தேர்தலில் சுவாரஸ்யம்..
தினக்கூலித் தொழிலாளி ஒருவர், தனது ஆதரவாளர்களிடமிருந்து ரூ.10,000 ரூபாயை 1 ரூபாய் நாணயமாகத் திரட்டி குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் டெபாசிட் செய்தார்.
2019ல் குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள குடிசைப் பகுதி இடிக்கப்பட்டு அதில் பாதித்த தினக்கூலித் தொழிலாளி ஒருவர், தனது ஆதரவாளர்களிடமிருந்து ரூ.10,000 ரூபாயை 1 ரூபாய் நாணயமாகத் திரட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் டெபாசிட் செய்துள்ளார்.
சில்லறையாக 10 ஆயிரம் டெபாசிட் :
காந்திநகர் வடக்கு தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராகப் போட்டியிடும் மகேந்திர பாட்னி, இந்த வார தொடக்கத்தில் நாணயத்தில் 10,000 ரூபாயை டெபாசிட் செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் அருகே இடிக்கப்பட்ட குடிசைப் பகுதியில் உள்ள 521 குடிசைகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், தங்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுமாறு மகேந்திர பாட்னியை கேட்டுக் கொண்டனர்.
இரண்டு முறை இடம்பெயர்ந்த குடிசை பகுதியில் வசிப்பவர்களில் பாட்னியும் ஒருவர், முதலில் 2010 ஆம் ஆண்டில் மகாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட தண்டி குடிர் அருங்காட்சியகத்தை அமைக்கும் போது இடம்பெயர்ந்தனர். பின் அதற்கு அருகில் ஹோட்டல் கட்டுமானத்தின் போதும் மீண்டும் அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டனர். "நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன்.
கூலித்தொழிலாளி :
”கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த நான் தினக்கூலியாக வாழ்ந்து வருகிறேன். பெரிய ஹோட்டல் அமைப்பதற்காக 521 குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டன. அவர்களில் பலர் வேலையிழந்தனர். அருகிலுள்ள பகுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு தண்ணீர் மின்சாரம் இல்லை," என்று பாட்னி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மற்ற தினக்கூலிகள் 10,000 ரூபாய் நாணயத்தை சேகரித்து, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட டெபாஸிட் செலுத்துவதற்காக பணத்தை அவரிடம் வழங்கினர்.
தேர்தலில் போட்டியிடுவது ஏன்..?
மேலும் அவர் கூறுகையில் "இடம்பெயர்வதற்கு முன், எங்கள் பகுதியில் மின்சாரம் இருந்தது. நாங்கள் ஹோட்டலுக்கு அருகிலுள்ள வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பிறகு, தண்ணீர், மின்சாரம் இல்லை, எந்த அரசியல்வாதியும் எங்கள் உதவிக்கு வரவில்லை, தேர்தல்கள் நெருங்கும் போது, சில அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் வந்து எங்களுக்கு சில உத்தரவாதங்களை வழங்குகிறார்கள், பின்னர் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இது 1990 களில் இருந்து நடந்து வருகிறது" என்று பாட்னி தெரிவித்தார். உள்ளூர் அதிகாரிகள் தற்போது இருக்கும் இடத்தையும் விட்டு வெளியேறும்படி வற்புறுத்துவதாக தகவல் வெளீயாகியுள்ளது.
அவர்கள் தங்குவதற்கு நிரந்தர இடம் கொடுத்தால் தேர்தலில் போடியிடப்போவதில்லை எனவும், தினக்கூலிகள் அதிகாரிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுதொழில் நடத்தப் பயன்படுத்தப்படும் வண்டிகளைக் கைப்பற்றி அதனை மீண்டும் பெறுவதற்கு ரூ. 2,500-3,000 வரை பணம் செல்வழிக்கப்படுவதாகவும் இதற்கு ஒரு தீர்வு அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைத்தார்.
குடிசைவாசிகளின் பிபிஎல் பட்டியலில் இடம்பெற்றால் அரசு அலுவலகங்களில் வேலைக்காக ஒப்பந்தக்காரர்களால் எடுக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் மற்றும் சரியான சம்பளம் மற்றும் இடைத்தரகர்கள் முற்றிலுமாக ஒதுக்கப்படுவார்கள். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் மற்றும் வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்படும்.