புதுச்சேரி : மழை நிவாரணமாக சிவப்பு அட்டைக்கு ரூ. 5 ஆயிரம்: பணிகளை தொடங்கிவைத்தார் முதலமைச்சர்
புதுச்சேரியில் மழை நிவாரணமாக சிவப்பு அட்டைக்கு ரூ. 5 ஆயிரம் தரும் பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுவையில் கடந்த மாதம் வரலாறு காணாத கனமழை பெய்தது. 1943ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவு மழை புதுவையில் பதிவானது. கனமழையால் புதுவை வெள்ளக்காடானது. நகரெங்கும் நூற்றுக்கும் மேலான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து கடந்த மாதம் 16ம் தேதி சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம், மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு பின் மீண்டும் தொடர் கனமழை பெய்தது. மழையால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து கடந்த 22ம் தேதி அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என ரங்கசாமி அறிவித்தார்.
அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதமாகியும் மழை நிவாரணம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கு நிதியில்லாததும், அதிகாரிகள் ஒத்துழைக்காததும் காரணமாகக் கூறப்பட்டது. இதையடுத்து அரசின் பிணையப் பத்திரங்கள் விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் மழை நிவாரணம் வழங்க அனுமதியளித்தார். சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் கார்டுக்கு ரூ.4 ஆயிரத்து 500 நிவாரணம் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரம் அரசு ஊழியர்களுக்கு மழை நிவாரணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இதில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் சிவப்பு நிற ரேஷன் கார்டுக்கும், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மஞ்சள் ரேஷன் கார்டுக்கும் என ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 27 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.156 கோடி மழை நிவாரணமாக வங்கியில் செலுத்தப்படுகிறது. மழை நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் இன்று தொடங்கி வைத்தார். முதல்வர் தொகுதியான தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மழை நிவாரணத்துக்கான ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், ”மழை நிவாரணமாக சிவப்பு கார்டு தாரர்களுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 வழங்கப்படும். இத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொங்கலுக்கு ரொக்கத்துக்கு பதிலாக இலவச கைலி, சேலை வழங்க உள்ளோம். அமுதசுரபி மூலம் சேலை, கைலி கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். கொரோனா விதிகளைக் கடைப்பிடித்து புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல கடற்கரை சாலையிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும்" என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்