11 AM Headlines: மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு, 40 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - டாப் 10 செய்திகள்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
மதுரை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்:
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் இன்று இரவு 7 மணிக்கு மதுரைக்கு செல்கிறார். இதையடுத்து பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்
தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 வழித்தடங்களில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாகவும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.480 அதிகரித்து, 59 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. அதாவது ஒரு கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 108 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்கிய கடற்கரை - வேளச்சேரி ரயில் சேவை
14 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால், மறு உத்தரவு வரும் வரை பூங்கா நகரில் ரயில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம்
ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடான ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தில், 70 வயத பூர்த்தி செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த நடைமுறையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக பெற முடியும்.
கோயில் திருவிழாவில் தீ விபத்து - 150 பேர் காயம்
கேரள மாவட்டம் காசர்கோட் பகுதியில் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரராகவர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 154 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நள்ளிரவில் பட்டாசு வெடித்தபோது, தீப்பொறி பறந்து சென்று பட்டாசு கிடங்கில் விழுந்து பட்டாசுகள் மொத்தமாக வெடித்ததால் விபத்து என தகவல்.
ராணுவ முகாமில் தாக்குதல் - 40 வீரர்கள் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமினுள் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன் விலகல்
இந்திய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பங்கேற்கமாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர், இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வை அறிவித்தார் மேத்யூ வேட்
ஆஸ்ட்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ வேட், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 2011ம் ஆண்டு அறிமுகமான அவர், ஆஸ்திரேலியாவுக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Ballon D'or விருதை வென்றார் ரோட்ரி!
கால்பந்தாட்ட உலகின் உயரிய விருதான Ballon D'or, இந்தாண்டு ஸ்பெயின் வீரர் ரோட்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறையாகும். மேன்சிஸ்டர் சிட்டி கிளப் அணிக்காவும் இவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.