"தமிழ்நாடு செஞ்ச இந்த விஷயம் ரொம்ப உதவியா இருக்கு" IMF கீதா கோபிநாத் பாராட்டு!
குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் எளிதாக வியாபாரம் செய்வது மேம்படுத்தப்பட்டிருப்பது உதவிகரமாக இருந்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிர்ச்சி ஆய்வுகள் வெளியாகி வருகின்றன. கடந்த மக்களவை தேர்தலில், பாஜக சந்தித்த பின்னடைவுக்கு வேலையின்மை அதிகரித்ததே காரணம் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவது எப்படி?
இந்த நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் பேசியுள்ளார். வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்தியாவுக்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கீதா கோபிநாத் அளித்த பேட்டியில், "இந்தியாவை பொறுத்தவரையில், வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவால் (AI) ஏற்படும் எந்த இடையூறும் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும். ஏனெனில், இந்தியாவின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் உழைப்பு மிகுந்த விவசாயத்தில் உள்ளனர்.
வளர்ச்சியில் இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இது, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகும். கடந்த 10 ஆண்டுகளில், நீங்கள் பார்த்தால், வளர்ச்சி சராசரியாக 6.6 சதவீதமாக உள்ளது. நிச்சயமாக இந்தியாவின் வளர்ச்சியானது அதிக மூலதனத்தை சார்ந்தே இருக்கிறது. ஆனால், அதிக வேலையாட்களை பணியமர்த்துவதில், அதிக வேலைகளை உருவாக்குவதில் மிகவும் குறைவாகவே உள்ளது" என்றார்.
கீதா கோபிநாத் சொன்னது என்ன? தமிழ்நாடு குறித்து பேசிய கீதா கோபிநாத், "சமீப காலமாக, எளிதாக வியாபாரம் செய்வதை மேம்படுத்துவது உதவிகரமாக இருந்துள்ளது. குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் நாம் பார்க்கிறோம். வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளை நீக்குவதும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொது உள்கட்டமைப்பு முதலீடு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அது உதவும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆனால், இதை நடுத்தர நீண்ட கால வளர்ச்சிக் கதையாக மாற்ற, மனித மூலதனத்தில் அதிக முதலீடு செய்வதும், பணியாளர்களை அதிகரிக்கவும் வேண்டும். பல காலமாக, கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவின் பணியாளர்களைப் பார்க்கிறீர்கள்.
ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு. எனவே, நாட்டின் திறன் அளவை உயர்த்துவதில் முதலீடு செய்வது முற்றிலும் முக்கியமானதாக இருக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்க பன்முக அணுகுமுறை தேவை. எண்ணிக்கைகள் பெரியவை. ஒரு சில பகுதிகளை குறிவைத்து இதைச் செய்ய முடியாது. இதற்கு பரந்த அடிப்படையிலான வேலை உருவாக்கம் தேவைப்படும்" என்றார்.