(Source: ECI/ABP News/ABP Majha)
ஐஐடி மும்பை மாணவர் தற்கொலை பின்னணியில் சாதி பாகுபாடா? நடந்தது என்ன?
மாணவரின் தந்தை ரமேஷ் சோலங்கி தனது மகன் தர்ஷன் உயிரிழப்பு பின்னணியில் சாதிப்பாகுபாடு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இதனை சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஐஐடி மும்பையைச் சேர்ந்த மாணாவர் தர்ஷன் சோலங்கி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மாணவரின் தந்தை ரமேஷ் சோலங்கி தனது மகன் தர்ஷன் உயிரிழப்பு பின்னணியில் சாதிப் பாகுபாடு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இதனை சிறப்பு புலனாய்வுக் குழு சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இது தொடர்பாக மாணவர் தர்ஷனின் தந்தை ரமேஷ் சோலங்கி, மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்பி பாலச்சந்திரா முங்கேகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தர்ஷன் சோலங்கியின் சொந்த ஊர் குஜராத் மாநிலம் அகமதாபாத். அவர் மும்பை ஐஐடியில் பிடெக் ரசாயனம் படித்துவந்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியின் 7வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி நடந்தது. செமஸ்டர் தேர்வுகளின் கடைசி நாளில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த விசாரணையை மேற்கொண்டுவரும் சிறப்பு புலனாய்வுக் குழுவானது சாதி ரீதியான துன்புறுத்தல் என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் சமர்ப்பித்துவிட்டதாக மாணவரின் தந்தை கூறினார்.
தர்ஷனின் அறையில் இருந்த இன்னொரு இளைஞர் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். முன்னதாக தர்ஷனின் குடும்பத்தினர் மற்றும் சக மாணவர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் தர்ஷன் சாதி பாகுபாட்டால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாதி பாகுபாட்டின் காரணமாக தர்ஷன் அறை மாற்றிச் செல்ல விரும்பியுள்ளார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார் என்ற அவரின் தந்தை ரமேஷ் தெரிவித்துள்ளார். தர்ஷன் கணினி மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்களைப் பற்றி கேள்வி எழுப்பியபோது அவரைச் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தர்ஷனின் தற்கொலைக் கடிதத்தில் இருப்பது அவருடைய கையெழுத்தே இல்லை என்று தந்தை கூறினார்.
தர்ஷனின் சகோதரி ஜான்வி கூறும்போது, அது என் சகோதரரின் கையெழுத்தே இல்லை என்றார். ஆனால் இதுநாள் வரை சிறப்புப் புலனாய்வுக் குழு அது தர்ஷனின் கையெழுத்து என்று கூறிவருகிறது. தர்ஷனின் சகோதரி மேலும் கூறுகையில், என் சகோதரரின் எலக்ட்ரானிக் உபகரணங்களில் திறட்டப்பட்ட தகவல்களின் க்ளோன் பிரதிகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.
டாக்டர் மூங்கேகர் கூறுகையில், மாணவர் தர்ஷனின் தற்கொலைக்கு ஐஐடி மும்பையில் நிலவும் சாதிப்பாகுபாடுதான் முதல் காரணம் என்று நாங்கள் கருதுகிறோம் என்று கூறினார்.
தர்ஷன் தற்கொலைக்கு தூண்டப்பட்டதற்கான ஆதாரங்களை ஏராளமாக நாங்கள் கொடுத்துவிட்டோம். அது அத்தனையுமே அவருக்கு நேர்ந்த சாதி பாகுபாடு சார்ந்தது. ஆனால் அத்தனை ஆதாரங்களுக்குப் பின்னரும் சிறப்பு புலனாய்வுக் குழு ஏன் சாதி பாகுபாடு கோணத்தில் விசாரிக்க மறுக்கிறது என்பது எங்களுக்குப் புரியவே இல்லை என்றும் மூங்கேகர் கூறினார்.