"நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன்.. பயங்கரவாதம் பற்றி பிரதமரை விட எனக்கு நன்றாக தெரியும்" ராகுல்காந்தி உருக்கம்
எனக்கு பயங்கரவாதத்தின் விளைவு பற்றி பிரதமர் நரேந்திர மோடியைவிட நன்றாகவே தெரியும். நான் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளேன் என்று ராகுல் காந்தி கூறினார்.
எனக்கு பயங்கரவாதத்தின் விளைவு பற்றி பிரதமர் நரேந்திர மோடியைவிட நன்றாகவே தெரியும். நான் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளேன். என் குடும்பத்தினர் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி இவ்வாறாக பேசினார். என் தந்தை, என் பாட்டி என இருவரை நான் பயங்கரவாதத்திற்கு இழந்துள்ளேன் என்று ராகுல் காந்தி கூறினார்.
பிரதமர் சூறாவளி பிரச்சாரம்:
கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி கர்நாடகாவில் 3 நாட்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட இருக்கிறார். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் பெல்லாரியில் அவர் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து மாலை துமக்கூருவில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணி வரை திறந்த வாகனத்தில் பெங்களூருவில் உள்ள திப்பசந்திராவில் இருந்து பிரிகேட் சாலை வரை பேரணியாக சென்றார் பதாமியிலும், ஹாவேரியிலும் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.
கர்நாடக தேர்தல்:
கர்நாடகாவில் வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் கணிப்புகள் பலவும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று கூறியுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைத்தது.
அதிக தொகுதிகளில் வென்றிருந்தாலும் கூட காங்கிரஸ் முதல்வர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுத்தது. குமாரசாமி முதல்வரானார். ஆனால் அந்தக் கட்சிக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. குதிரை பேரம் மூலம் சில எம்.எல்.ஏ.க்கள் விலை போயினர். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. ஆனால் எடியூரப்பா ஒன்றரை ஆண்டுகளிலேயே முதல்வர் பதவியை துறக்கும் சூழல் உருவானது. அதன் பின்னர் பசவராஜ் பொம்மை முதல்வரானார். இந்நிலையில் இப்போது பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.
கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி நேற்று வரையில் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 6420 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பின் முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெளியான கருத்துகணிப்பு முடிவுகளின் படி, வரும் தேர்தலில் 40.2 சதவிகித வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த முறை ஆட்சி அமைக்கும் என ஏபிபி- சி வோட்டர் கணித்துள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு அரை லிட்டர் பால் இலவசம், 5 கிலோ அரிசி இலவசம், ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது பாஜக.