உஷார்! ஆதார் எண்ணை கொண்டு ஆட்டையைப்போட்ட ஊழியர்கள்! மாயமான வங்கி பணம்!
ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தனது பத்திரங்களை பதிவு செய்த பின்னர், சில வாரங்களில் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து மர்மமான முறையில் தொடர்ந்து பணம் மாயமாகி வந்தது.
பத்திரப்பதிவு வெப்சைட்டில் இருந்து ஆதார், கைரேகைகளை பதிவிறக்கம் செய்து 149 பேரின் வங்கி கணக்கில் இருந்து 15 லட்சம் மோசடி செய்த முன்னாள் பத்திரப்பதிவு ஊழியர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவர் கர்னூல் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒப்பந்தமுறையில் பணிபுரிந்து வந்தார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் ஏபிஐஜிஆர்எஸ் எனப்படும் பத்திரப்பதிவு வெப்சைட்டில் சென்று பத்திரப்பதிவு செய்தவர்களின் புகைப்படம், ஆதார் மற்றும் கைரேகைகளை பட்டர் பேப்பர் எனப்படும் காகிதத்தில் தரவிறக்கம் செய்து சேகரித்து வந்துள்ளார்.
மேலும், கைரேகைகளை பதிவிறக்கம் செய்து ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடை ஒன்றில் கொடுத்து அதேபோன்ற ரேகைகளை ரப்பர் ஸ்டாம்பாக தயாரித்து சேகரித்துள்ளார். பின்னர், ரப்பர் ஸ்டாம்ப்பை ஏடிஎம் இயந்திரங்களில் ரேகை பதிவு செய்து மினி ஸ்டேட்மெண்ட் எடுத்துள்ளார். பின்னர், அதே வங்கி கணக்கில் இருந்து பணம் திருடி வந்துள்ளார்.
இதேபோன்று ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தனது பத்திரங்களை பதிவு செய்த பின்னர், சில வாரங்களில் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து மர்மமான முறையில் தொடர்ந்து பணம் மாயமாகி வந்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தினர் ஹைதராபாத்தில் உள்ள சைப்ராபாத் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பிரகாசம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த வெங்கடேஸ்வரலுவை நேற்று முன்தினம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர்.
அதன்படி, இந்த துணிகர மோசடியில் இவருடன் பலர் உடந்தையாக இருப்பார்கள் என்பதால் வெங்கடேஸ்வரலுவிடம் கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 3.50 லட்சம் ரொக்கம், 125 சிம் கார்டுகள், 20 செல்போன்கள் மற்றும் கைரேகை பதிவு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட கருவிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சைப்ராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்ரீபன் ரவீந்திரா அளித்த பேட்டியில், "வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து மொத்தம் 10 ஆயிரம் பேரின் கைரேகைகளை பதிவுகளை பறிமுதல் செய்துள்ளோம். இவர்கள் 149 பேரின் வங்கி கணக்கில் இருந்து இதுவரை ரூ.15 லட்சம் எடுத்தது தெரியவந்துள்ளது. காலை முதல் பத்திரப்பதிவு செய்ய வருவோரின் ஆவணங்களை சேகரித்து குழுவாக இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கிறோம்," என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்