Hyderabad Encounter: நாட்டையே பரபரப்பாக்கிய ஹைதராபாத் என்கவுண்டர்.. விசாரணை ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி..!
ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், சுட்டுக்கொல்லப்பட்ட கொலையாளிகள் கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே காவல்துறையினரால் என் கவுண்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சுட்டுக்கொல்லப்பட்ட கொலையாளிகள் கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே காவல்துறையினரால் என் கவுண்டர் செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், “பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்றவர்கள், சாகடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே காவல்துறையினரால் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்ன கேஷவலு ஆகியோர் மூவர் மைனர் ஆவர் ( 18 வயது நிரம்பாதோர்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து அந்த மூவருக்கும் 20 வயதுதான் என கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் வெளிப்படையான குறைகளை முன்வைத்த ஆணையம், இந்த குற்றம் தொடர்பாக 10 போலீசாரை விசாரிக்க பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு உள்ள பாலத்துக்கு அருகே எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், சுங்கச்சாவடி அருகே பதிவாகியிருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆராய்ந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் முகமது அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்ன கேஷவலு ஆகிய 4 பேரையும் கைது செய்த காவல்துறை அவர்களை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது. இந்த என்கவுன்டர் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம், நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான 3 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அமைத்தது.
மேலும் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் பின்னர் அந்த கால அவகாசத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்தது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் அறிக்கையை சமர்பிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். இந்த நிலையில்தான் தற்போது ஹைதராபாத் என்கவுன்டர் போலியானது என்றும் இந்த என்கவுன்டரில் ஈடுபட்ட 10 காவலர்களின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.