உயிருடன் எரிந்த மனைவி.. காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கணவன்.. கொடூரத்தின் உச்சம்!
இந்த தம்பதியினரிடையே, அவர்களது குழந்தை வளர்ப்பு தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய தகராறு காரணமாக இந்த தீக்குளிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

குஜராத் மாநிலத்தில் மனைவி கணவர் கொண்ட சந்தேகத்தால் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கணவர் மனைவியை காப்பாற்றாமல் வீடியோ பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் தான் இந்த கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு ரஞ்சித் சஹா என்ற நபர் தனது மனைவி பிரதிமா தேவியுடன் வசித்து வந்தார். கடந்த ஜனவரி 4ம் தேதி பிரதிமா தேவி தீக்குளித்து தற்கொலை முயன்ற நிலையில் ஜனவரி 11ம் தேதி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரதிமா தேவியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது தனது சகோதரி மரணத்தில் கணவருக்கு தொடர்பு இருக்கலாம் என பிரதிமா தேவி சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை சூடுபிடித்த நிலையில் ரஞ்சித் சஹா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது கொடுமைப்படுத்துதல் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பிரதிமா தேவியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக ரஞ்சித் சஹாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கேலரி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு வீடியோ கிளிப் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தம்பதியினரிடையே, அவர்களது குழந்தை வளர்ப்பு தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய தகராறு காரணமாக இந்த தீக்குளிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில் சஹா தனது மனைவியிடம் எண்ணெய் தடவி தன்னைத்தானே எரித்துக் கொள்ளச் சொல்லும் ஆடியோ பதிவாகியுள்ளது.
இதனால் வீட்டில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி பிரதிமா தேவி தற்கொலை செய்துக் கொண்டார். ஒருவேளை தான் சிக்கிக் கொண்டால் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவும், மனைவியின் மரணத்திற்கு பழி சுமத்தப்படுவதைத் தவிர்க்கவும், சஹா முழு சம்பவத்தையும் தனது தொலைபேசியில் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மனைவி தற்கொலை செய்வதை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்த கணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த ரஞ்சித் சஹாவும் பிரதிமாதேவியும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பின்னர் 2013 இல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட திருமணம் செய்து கொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் சூரத்தில் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.





















