(Source: ECI/ABP News/ABP Majha)
SBI Survey On Middle Class: நீங்களும் லட்சாதிபதி... எப்போது தெரியுமா? நடுத்தர குடும்பங்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கும் எஸ்பிஐ - வெளியான ரிப்போர்ட்
இந்தியாவில் நடுத்தர குடும்பங்களின் வருவாய் தொடர்ந்து அதிகரிப்பதாக எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடுத்தர குடும்பங்களின் வருவாய் தொடர்ந்து அதிகரிப்பதாக எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ ஆய்வறிக்கை:
வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் விவரங்களின் அடிப்படையில், பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் வரி செலுத்துவதன் மூலம் ஏற்படும் முன்னேற்றங்கள், நடுத்தர குடும்பங்களின் வருவாய் வளர்ச்சி மற்றும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உய்ர்வு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. 2011-12 நிதியாண்டிலிருந்து 2022-23 நிதியாண்டு வரையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் விவரங்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஆய்வு செய்தது எப்படி?
மாநில வாரியாக வரி செலுத்தியோரின் விவரங்கள் கிடைக்காததால், ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் ஆய்வறிக்கையின்படி, 2047ம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகை 161 கோடியாக இருக்கும். ஐநா அறிக்கயின்படி, வேலை செய்யும் வயதான 15 முதல் 64 வயது வரையிலான மக்கள் தொகை கொண்ட காலம் இந்தியாவில் 2040ம் ஆண்டு உச்சத்த எட்டி அதன் பிறகு சரிவை தொடங்கும். ஐநா அறிக்கையின்படி, 2047ம் ஆண்டு நாட்டின் மொத்த வேலை திறனில் 22 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபடுவர். அதோடு விவசாயம் அல்லாத பிற பணிகளில் ஈடுபடுவோர் வரிகளுக்கு கீழ் கொண்டுவரப்படுவர். மேற்குறிப்பிடப்பட்ட கூறுகளை அடிப்படையாக கொண்டு, எஸ்பிஐ வங்கி ஆய்வை நடத்தி முடித்துள்ளது. அதில், நடுத்தர குடும்பங்கள் எதிர்வரும் காலங்களில் நல்ல முன்னேற்றம் காணும் என தெரிவித்துள்ளது.
வளரும் நடுத்தர குடும்பங்களின் வருவாய்:
அதன்படி, ”ஒவ்வொரு ஆண்டும் நடுத்தர குடும்பங்களின் வருவாய் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014ம் ஆண்டு இந்த சராசரி வருவாய் ரூ.4.4 லட்சமாக இருந்தது. 2023ம் ஆண்டில் அது 13 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. 2047ம் ஆண்டு இந்த சராசரி ஆண்டு வருவாய் 49.7 லட்ச ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. கீழ் மட்டத்திலிருந்த குடும்பங்களின் வருவாய் உயர்ந்து அவர்கள் மேல்மட்டத்திற்கு (upper middile class) மாற்றம் காண்பது, அதிகப்படியான நபர்கள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது ஆகியவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.
அதிகரிக்கும் வருவாய்:
2011-12ம் ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களில் 84 சதவிகிதம் பேர் அதாவது ஒருகோடியே 60 லட்சம் பேர், 5 லட்சம் ரூபாய் வரையில் வருவாய் கொண்டவர்கள் ஆவார். ஆனால், 2023ம் ஆண்டு வருமான வரி செலுத்தியவர்களில் 64 சதவிகிதம் அதாவது 6 கோடியே 85 லட்சம் பேர் மட்டுமே 5 லட்சம் ரூபாய் வரையில் வருவாய் கொண்டவர்களாக உள்ளனர். இந்த இரண்டு புள்ளி விவரங்களையும் ஒப்பிடுகையில் வருமான வரி இல்லாத விதிகளின் கீழ், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது 13.6 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது, 13.6 சதவிகிதம் மக்கள் வரி இல்லாத வருவாயிலிருந்து, வரி செலுத்தும் அளவிலான கூடுதல் வருவாயை ஈட்ட தொடங்கியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.
உயரும் எண்ணிக்கை:
இந்த இரண்டு மதிப்பீட்டு ஆண்டுகளின் விவரங்களையும் ஒப்பிடும்போது, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 8.1 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 3.8 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 1.5 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 0.2 சதவிகிதம் அளவிற்கும், ரூ.1 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 0.02 சதவிகிதம் அளவிற்கும் உயர்ந்துள்ளது.
2047ம் ஆண்டு நிலை:
2023ம் ஆண்டு வருமான வரி செலுத்தியவர்களில் குறைந்த வருவாய் கொண்ட நடுத்தர குடும்பங்களின் பட்டியலில் இருந்து, 25 சதவிகிதம் பேர் 2047ம் ஆண்டுக்குள் வெளியேறுவார்கள். 17.5 சதவிகிதம் பேர் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுபவர்களாக ஏற்றம் காணுவர். 5 சதவிகிதம் பேர் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 வரை வருவாய் ஈட்டுபவர்களாகவும், 3 சதவிகிதம் பேர் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களாக மாற்றம் காணுவார்கள். இதேபோன்று, 05. சதவிகிதம் பேர் ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரையிலும், 0.075 சதவிகிதம் பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுபவர்களாக வளர்ச்சியை சந்திப்பர் என” எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.