6 கோடி ரூபாயை கொள்ளையடித்த கும்பல்...சிறிய தவறு செய்து சிக்கியது எப்படி?
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் இரண்டு பேரிடம் கொள்ளையடித்ததாக பேடிஎம் பரிவர்த்தனை உதவியுடன் ராஜஸ்தானில் இருந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் இரண்டு பேரிடம் கொள்ளையடித்ததாக பேடிஎம் பரிவர்த்தனை உதவியுடன் ராஜஸ்தானில் இருந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். இருவர் கண்ணில் மிளகாய் பொடியை வீசி 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாகேஷ் குமார் (28), சிவம் (23), மற்றும் மணீஷ் குமார் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், இரண்டு ஆண்கள், ஒருவர் போலீஸ் சீருடையில், ஒரு தெருவில் நடந்து செல்வதைக் காணலாம். ஒரு கட்டத்திற்குப் பிறகு, அவர்கள் இரண்டு நபர்களை நிறுத்துகிறார்கள்.
இதற்கிடையில், மேலும் இரண்டு ஆண்கள் அவர்களுடன் இணைகிறார்கள். பின்னர், அவர்கள் கண்களில் மிளகாய் பொடியை வீசிவிட்டு பார்சலை எடுத்துக்கொண்டு ஓடுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலிஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவம் குறித்து விவரித்த காவல்துறை தரப்பு, "புகார்தாரர் சோம்வீர், சண்டிகரில் உள்ள பார்சல் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிவதாக கூறியுள்ளார்.
புதன்கிழமை அதிகாலை 4.15 மணியளவில், அவர், தனது சக ஊழியர் ஜக்தீப் சைனியுடன், பஹர்கஞ்சில் உள்ள அலுவலகத்திலிருந்து பார்சல்களை எடுத்துக்கொண்டு டிபிஜி சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் மில்லேனியம் ஹோட்டலுக்கு அருகில் சென்றபோது, அங்கு ஏற்கனவே இருவர் இருப்பதைக் கண்டார்கள்.
அவர்களில் ஒருவர் போலீஸ் சீருடை அணிந்திருந்தார். அவர் சோதனைக்காக பைகளை கேட்டார். இதற்கிடையில் மேலும் இருவர் வந்து, அவர்களின் கண்ணில் மிளகாய் பொடியை வீசிவிட்டு, பையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்த நகைகள் அடங்கிய பார்சல்களை கொள்ளையடித்துவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
விசாரணையின் போது, சம்பவம் நடந்த 7 நாட்களில் 700 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் சரிபார்த்து, புலனாய்வு தகவல்களையும் சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த 4 பேரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு கேப் டிரைவருடன் பேசிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் தேநீர் வாங்குவதற்கு 100 ரூபாய் டிரைவரின் கணக்கிற்கு Paytm மூலம் கொடுத்துள்ளார்.
அந்த பரிவர்த்தனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, குற்றவாளிகள் நஜஃப்கரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானுக்கு சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். ஜெய்ப்பூருக்கு ஒரு குழு அனுப்பப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து மொத்தம் 6,270 கிராம் தங்கம், மூன்று கிலோ வெள்ளி, 500 கிராம் தங்கம், ஐஐஎஃப்எல்-ல் டெபாசிட் செய்யப்பட்ட 106 வைரங்கள், மற்ற வைர நகைகள் என மொத்தம் 5.5 ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் மதிப்பிலானவை மீட்கப்பட்டன.
மேலும், மீதமுள்ள குற்றவாளிகளை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட நாகேஷ், தனது நண்பர்கள் மற்றும் தாய் மாமாவுடன் சேர்ந்து இந்த குற்றத்தை செய்ய திட்டமிட்டார்" என்றார்.