HMPV: திருந்தாத சீனா? அச்சுறுத்தும் HMPV வைரஸ், மிகவும் மோசமானதா? அறிகுறிகள், பாதிப்புகள் என்ன?
HMPV: HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
HMPV: மனித மெட்டாப்நியூமோ வைரஸின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மூடி மறைக்கும் சீனா?
சீனாவில் இருந்து பரவ தொடங்கி பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம், மெல்ல மெல்ல குறைந்து தற்போது தான் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மற்றொரு சுவாச வைரஸான மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) சீனாவில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆரம்ப நாட்களில் இந்த தொற்று தொடர்பான தகவல்களை சீனா வெளியிடாமல் மறைக்க முயற்சித்துள்ளது. முன்னதாக, கொரோனா தொற்று தொடர்பான தகவல்களையும் சீனா மறைத்ததன் விளைவாகவே, உலகம் முழுவது லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அதேநேரம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் எச்சரிக்க தொடங்கியுள்ளன. முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வலியுறுத்துகின்றன. இதனிடையே, இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளடக்கிய பல வைரஸ்களின் அதிகரிப்பை சீனா எதிர்கொள்வதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
HMPV என்றால் என்ன?
HMPV அல்லது மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்பது ஒரு ஆர்என்ஏ வைரஸ் மற்றும் நிமோவிரிடே, மெட்டாப்நியூமோவைரஸ் வகையைச் சேர்ந்தது. இது முன்னர் 2001 இல் டச்சு ஆராய்ச்சியாளர்களால் சுவாச நோய்த்தொற்று உள்ள குழந்தைகளின் மாதிரிகளைப் படிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் ஒரு பொதுவான சுவாச நோய்க்கிருமியாக உலகம் முழுவதும் பரவியுள்ளது மற்றும் முக்கியமாக நீர்த்துளிகளில் - இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொற்று லேசானது, ஆனால் சிறு குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் தீவிர நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.
மனித மெட்டாப்நியூமோவைரஸின் அறிகுறிகள்
- இருமல்
- காய்ச்சல்
- மூக்கு ஒழுகுதல்
- மூக்கடைப்பு
- தொண்டை வலி
- மூச்சுத்திணறல்
- சொறி
மனித மெட்டாப்நியூமோவைரஸ் சிகிச்சை:
மனித மெட்டாப்நியூமோவைரஸுக்கு சிகிச்சையளிக்க வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. பெரியவர்களிடையே பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நபர் நன்றாக உணரும் வரை அறிகுறிகளை வீட்டிலேயே நிர்வகிக்க முடியும். இருப்பினும், ஒரு நோயாளி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது சிக்கல்களை உருவாக்கினால், மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவரை அணுகுவது நல்லது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை கழுவுதல்.
- தும்மும்போது அல்லது இருமும்போது உங்கள் கைகளை மூக்கு மற்றும் வாயை மூடவும்.
- பிறர் சளி அல்லது பிற தொற்று நோய்களால் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அருகில் இருப்பதைத் தவிர்க்கவும்.
- நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் மாஸ்க் அணியுங்கள்.
- முகம், கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்
இந்தியா தீவிரம்:
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ சீனாவில் எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தியாவில் சுவாசத் தொற்றுகள் மற்றும் பருவகால புளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாத தரவுகளின்படி, இப்பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு இல்லை. தற்போதைய சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை.
பொதுவாக குளிர்காலங்களில் சுவாசத் தொற்று அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.