முஸ்லீம் சகோதரர் இறப்பு; கோலாகலமாக நடைபெறவிருந்த இந்து கோயில் திருவிழா ரத்து! கேரளத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!
உயிரிழந்த ஹைதரின் இறுதிசடங்கு வரை கோயில் நிர்வாகிகள் மற்றம் இந்து சமூகத்தினர் மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.
கேரளாவில் மலப்புரம் பகுதியில் இஸ்லாம் சகோதரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் நடைபெறவிருந்த கோவில் திருவிழாக்களை ஒத்திவைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தியா என்றாலே சகோதரத்துவத்திற்கு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்று தான் கூற வேண்டும். எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும் ஏதேனும் ஒர் உதவி என்றால் முன்னின்று உதவும் மனப்பான்மைக் கொண்டவர்கள். இந்துவா இருந்தால்என்ன? முஸ்லீமா இருந்தால் என்ன? கிறிஸ்துவர்களா இருந்தால் என்ன? எந்த வேறுபாடும் இல்லை. எப்போதும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர் நம் இந்தியர்கள். இதற்கு சிறந்த உதாரணமாக ஒர் சம்பவம் ஒன்று கேரளத்தில் அரங்கேறி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் மலப்புரத்தில் பீரஞ்சிரா கிராமத்தில் புன்னச்சேரி பகவதி கோயில் ஒன்று உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சியாக திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் அதிகரிப்பினால் எந்த திருவிழாக்களும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் கோவில்கள் திருவிழாக்களை வெகுவிமர்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குள்ளதாக, கடந்த பிப்ரவரி 11 அன்றிரவு கோயிலின் அருகே வசிக்கும் 72 வயதான செரட்டில் ஹைதர் என்ற இஸ்லாமிய சகோதரர் ஒருவர் இறந்து விட்டார். இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்தவர் என்பதால் இந்து கோயிலில் விழாக்களைக் குறைத்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற சனிக்கிழமை வரை நடைபெற இருந்த ஊர்வலங்கள் மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செய்ய கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதோடு மட்டுமின்றி கோயிலுக்குள்ளே சிறிய அளவிலான பூஜைகள் மற்றும் சடங்குகளை மட்டும் நடத்தியுள்ளனர். ஒரு இஸ்லாமிய சகோதரர் மரணத்தையடுத்து இந்து கோயிலின் வழிபாடுகள் ரத்தான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதோடு இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து கோவில் கமிட்டி துணைத்தலைவ் எம்.வி.வாசு தெரிவிக்கையில், உயிரிழந்த ஹைதர் எங்கள் கிராமத்தில் உள்ள இந்து சமூகத்திற்கும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் மர வியாபாரியாக இருந்த அவர் பல ஆண்டுகளாக கோயில் வாசல் முன்பாக உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் இவர் கடந்த பிப்ரவரி11 அன்று உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்தது. இதனையடுத்து கோலாகலமாக நடைபெறவிருந்த திருவிழாக்களை ரத்து செய்து விட்டதாகவும், இதனால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சாயத்து உறுப்பினர் பி. முஸ்தபா,கோவிலின் இந்த முடிவுகள் அனைவராலும் பாராட்டினைப்பெற்றது என தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஹைதரின் இறுதிசடங்கு வரை கோவில் நிர்வாகிகள் மற்றம் இந்து சமூகத்தினர் மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.