தொடர் தோல்வியில் இருந்து மீண்ட காங்கிரஸ்...ஆனாலும் குழப்பம்...இமாச்சலின் அடுத்த முதலமைச்சர் யார்?
இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங், முதலமைச்சராக வருவதற்கு காய்களை நகர்த்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியின் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி கட்சியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங், முதலமைச்சராக வருவதற்கு காய்களை நகர்த்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. வீரபத்ர சிங் மறைவை தொடர்ந்து, இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவராக பிரதிபா நியமிக்கப்பட்டார்.
இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் பதவி, பிரதிபா சிங்குக்கு வழங்கப்படுமா என அவரின் மகன் விக்ரம்தித்ய சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "ஒரு மகனாக, பிரதிபாவுக்கு பெரிய பொறுப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஒரு மகனாக மட்டுமல்ல, கட்சியின் பொறுப்பான தலைவராகவும் தற்போது இருக்கிறேன். எனவே, கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதை மதிப்போம்" என்றார்.
சிம்லா ஊரக தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது குறித்து கூறியுள்ள அவர், "வீரபத்ர சிங் காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டும். வீர்பத்ர சிங் வகுத்த வளர்ச்சியின் மாதிரியில் அரசாங்கம் செயல்படும். அவர் இன்று சொர்க்கத்தில் சிரித்துக் கொண்டிருப்பார்" என்றார்.
பிரதிபா சிங்கை பொறுத்தவரை, அவர் தற்போது, மண்டி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார். அது, அவரது கணவர் வீரபத்ர சிங்கின் தொகுதியாகும்.
பிரதிபா சிங்கை தவிர, முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இரண்டு மூத்த தலைவர்கள் உள்ளனர். சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக உள்ள சுக்விந்தர் சுகு மற்றும் மூத்த தலைவரான முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மற்ற மாநிலங்களை போலவே, தோல்வி அடைந்த பிறகும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து, பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்யலாம் என காங்கிரஸ் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களில் பாஜக தோல்வி அடைந்த போதிலும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கட்சி தாவியதன் மூலம் பாஜக ஆட்சி அமைத்தது. எனவே, காங்கிரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரான ராஜீவ் சுக்லா, இதுகுறித்து கூறுகையில், "எம்எல்ஏக்கள் 90 கிமீ தொலைவில் உள்ள சண்டிகருக்கு அழைத்த செல்லப்படலாம். 40 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் வெற்றிபெற்றால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜகவின் முயற்சிகள் தோற்கடிக்கப்படும்" என்றார்.
முதலமைச்சர் பதவியை பொறுத்தவரை, கட்சியின் மேலிடமே முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.