Haryana Polls: தங்கமகள் வினேஷ் போகத்தை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ் - அனல் பறக்கும் ஹரியானா சட்டமன்ற தேர்தல்
Haryana Polls: ஹரியானா சட்டமன்ற தேர்தலில் முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Haryana Polls: ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு:
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 31 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, கார்ஹி சாம்ப்லா-கிலோய், மாநில கங்கிரஸ் தலைவர் உதய் பன் ஹோடலில் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். லத்வாவில் முதல்வர் நயாப் சைனியை மேவா சிங் எதிர்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, சோனிபட்டிற்கு சுரேந்தர் பன்வார், ரோஹ்தக்கிற்கு பாரத் பூஷன் பத்ரா, பட்லிக்கு குல்தீப் வாட்ஸ், ரேவாரிக்கு சிரஞ்சீவ் ராவ் மற்றும் ஃபரிதாபாத் என்ஐடிக்கு நீரஜ் சர்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
कांग्रेस अध्यक्ष श्री @kharge की अध्यक्षता में आयोजित 'केंद्रीय चुनाव समिति' की बैठक में हरियाणा विधानसभा चुनाव के लिए कांग्रेस उम्मीदवारों की लिस्ट। pic.twitter.com/0GsZyTFDVD
— Congress (@INCIndia) September 6, 2024
வினேஷ் போகத் வேட்பாளராக அறிவிப்பு;
குறிப்பாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை, வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர், நிர்ணயிக்கப்பட்டதை விட 100 கிராம் எட கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். முன்னதாக, ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக இருந்த, முன்னாள் பாஜக எம்பி மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி வினேஷ் போகத் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா சட்டமன்ற தேர்தல்:
90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆம் ஆத்மி உடன் பேச்சுவார்த்தை:
ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) வெள்ளிக்கிழமை கூடியது. அதன் முடிவில் ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில், 66 இடங்களுக்கான வேட்பாளர்களை CEC அனுமதித்துள்ளது, மீதமுள்ள 24 இடங்களுக்கான விவாதம் தொடர்கிறது.
இதற்கிடையில், ஹரியானா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் (ஆம் ஆத்மி) தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இரு தரப்பும் கடுமையான பேரம் பேசி வருகின்றன. ஆனால், . சில காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக ஹூடா பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி குறித்து ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியுள்ளனர், அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சிக்கு ஹரியானாவில் வலுவான இருப்பு இல்லை என்று வாதிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.