காலிஸ்தானி தீவிரவாதி கொலை வழக்கில் இந்திய தூதருக்கு தொடர்பு? கனடா பரபரப்பு குற்றச்சாட்டு!
நிஜ்ஜார் கொலை வழக்கு, இந்தியா, கனட உறவில் விரிசல் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக இந்தியா மீது கனட மீண்டும் பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்தாண்டு, ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்த குற்றச்சாட்டு உலக நாடுகளை கதிகலங்க வைத்தது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது.
மீண்டும் பற்றி எரியும் நிஜ்ஜார் கொலை விவகாரம்:
இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கனட விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்க தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா மீது கனட மீண்டும் பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
இந்த கொலைக்கும் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கும் தொடர் இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசாங்கம் இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை வலுவாக நிராகரிக்கிறது.
வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்ட ட்ரூடோ அரசாங்கத்தின் அரசியல் அஜெண்டாவின் காரணமாக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், பிரதமர் ட்ரூடோ, இதேபோன்ற சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இந்தியா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள்:
இந்த விவகாரம் தொடர்பாக கனட அரசாங்கத்திற்கு எங்கள் தரப்பில் இருந்து பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், இந்திய அரசுடன் ஒரு சிறிய ஆதாரத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை. எந்த வித ஆதாரங்களும் இன்றி மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
விசாரணை என்ற பெயரில், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை கொச்சைப்படுத்தும் திட்டமிட்ட உத்தி இதில் உள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, 36 வருடங்கள் அனுபவம் கொண்ட இந்தியாவின் மூத்த தூதர் ஆவார். ஜப்பான் மற்றும் சூடானில் தூதராக இருந்துள்ளார்.
அதே நேரத்தில் இத்தாலி, துருக்கியே, வியட்நாம் மற்றும் சீனாவில் பணியாற்றியுள்ளார். கனடா அரசாங்கத்தால் அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறுகள் முட்டாள்தனமானது. கண்டிக்கப்பட வேண்டியவை" என குறிப்பிட்டுள்ளார்.