சுற்றுலா சென்ற காதலனுக்காக தேர்வு எழுதிய காதலி..! அரசுப்பணியையே இழக்கும் அபாயத்தில் சிக்கிய அவலம்..! நடந்தது என்ன..?
சுற்றுலா சென்ற காதலனுக்காக முறைகேடாக தேர்வு எழுதிய இளம்பெண் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை பாய்ந்துள்ளது.
காதலுக்காக என்ன வேண்டுமானலும் செய்வது என்பது அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து வருகிறது. தொடக்க காலங்களில் உயிரையே கொடுப்பேன் என்பது தொடங்கி, தற்போதைய சூழலில் காதலனுக்கு அவரது வகுப்பில் கொடுக்கும் அசைன்மெண்ட்டை காதலியே முடித்து கொடுப்பது வரை இன்றைய காதல் அப்டேட் ஆகியுள்ளது. அந்த வகையில் தான் காதலனுக்காக குஜராத்தை சேர்ந்த இளம்பெண் செய்த காரியம் ஒன்று, இரண்டு பேரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
சுற்றுலா சென்ற காதலன்:
அரசு அதிகாரியான 24 வயதான இளம்பெண் வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் பி.காம் பயின்று வந்த தனது பள்ளிகால நண்பனை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால், அவருக்கு அரசுப்பணி கிடைத்துள்ளது. ஆனால், அவரது காதலன் படிப்பில் முறையாக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனால், கல்லூரிக்கு முறையாக வராமல் பி.காம் மூன்றாமாண்டில் அரியர் வைத்து இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் செமஸ்டர் தேர்வு நடந்தபோது, அந்த தேர்வில் பங்கேற்காத இளைஞர் உத்தராகண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
காதலனுக்காக தேர்வு எழுத முடிவு:
இதனால் கவலை கொண்ட அந்த இளம்பெண் தனது காதலனுக்காக தானே தேர்வை எழுதுவது என முடிவு செய்துள்ளார். இதற்காக, கணினியைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டில் மாற்றம் செய்து, தேர்வுக் கூடத்திற்குள் சென்று தானே தேர்வை எழுதுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி, ஹால் டிக்கெட்டில் காதலனின் புகைப்படத்துக்குப் பதிலாக தனது புகைப்படத்தை வைத்து, பெயரிலும் சிறிது மாற்றம் செய்து ஹால் டிக்கெட்டுடன் தேர்வு அறைக்கு சென்றுள்ளார்.
முறைகேட்டின் போது சிக்கிய இளம்பெண்:
வழக்கமாக தேர்வு கண்காணிப்பாளராக நாள்தோறும் ஒவ்வொருவர் வருவதால், தேர்வு எழுத வரும் மாணவர்களை பற்றி கண்காணிப்பளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாக அந்த பெண் தேர்வு அறைக்குள் எளிதாக நுழைந்து தேர்வை எழுத தொடங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த வேறொரு பெண் தேர்வாளர், வழக்கமாக இந்த தேர்வு எண்ணில் ஒரு ஆண் தான் தேர்வு எழுதுவார் என, கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து தேர்வு கண்காணிப்பாளர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது, அவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த மாணவனும் உத்தரகாண்டில் இருந்து வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழக அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அரசுப் பணியை இழக்கும் அபாயம்:
அதைதொடர்ந்து, நியாயமான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக் குழு விசாரணையை மேற்கொண்டு, தனது பரிந்துரையை வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழக சிண்டிகேட்டிடம் சமர்பித்தது. அதில், காதலனுக்காக மோசடி செய்த தேர்வு எழுதிய பெண்ணின், பி.காம் பட்டத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் அந்த பெண்ணுக்கு கிடைத்துள்ள அரசாங்க பணியையும், அவர் இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. அதோடு, அந்த மாணவன் தனது அரியர் தேர்வை எழுத 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.