ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயற்சி.. ஏரியில் குதித்த 5 சிறுவர்கள்.. நடந்தது என்ன?
குஜராத்தில் ஏரியில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்ற ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் தண்ணீரில் குதித்ததால், 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் பொடாட் நகரில் கிருஷ்ணசாகர் ஏரி அமைந்துள்ளது. நேற்று, இந்த ஏரிக்கு 5 சிறுவர்கள் சென்றுள்ளனர். அப்போது, ஒரு சிறுவன் ஏரியில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற மற்றொரு சிறுவன் விழுந்துள்ளார். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயற்சி செய்து ஐந்து சிறுவர்களும் ஏரியில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் அதிர்ச்சி:
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "கிருஷ்ணசாகர் ஏரியில் மதியம் நீந்திக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கத் தொடங்கினர். அந்த இடத்தில் இருந்த மேலும் மூன்று பேர் அவர்கள் நீரில் மூழ்குவதைக் கண்டு, இருவரையும் காப்பாற்ற தண்ணீரில் குதித்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர்" என்றார்.
"பொடாட் நகருக்கு வெளியே உள்ள கிருஷ்ணசாகர் ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் இன்று உயிரிழந்தனர். மதியம் இரண்டு சிறுவர்கள் நீந்திக் கொண்டிருந்தபோது அவர்கள் நீரில் மூழ்கத் தொடங்கினர். அந்த இடத்தில் இருந்த மேலும் 3 பேர் அவர்களை காப்பாற்ற தண்ணீரில் குதித்தனர். ஆனால், அவர்களும் நீரில் மூழ்கினர். உயிரிழந்தவர்களின் வயது 16-17 வரை இருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என படோட் எஸ்பி கிஷோர் பலோலியா தெரிவித்துள்ளார்.
தொடரும் சம்பவங்கள்:
சமீபகாலமாக, சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சேலம் - கன்னங்குறிச்சி புது ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சேலம் கன்னங்குறிச்சி புது ஏரியில் ஏராளமான சிறுவர்கள் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். புது ஏரியில் நீர் நிரம்பியுள்ள நிலையில், 7 அடி ஆழம் வரையிலும் தண்ணீர் ததும்ப காணப்பட்ட நிலையில், ஏரி தூர்வார ஆங்காங்கே குழிகளும் தோண்டப்பட்டிருந்தது.
கன்னங்குறிச்சி புது ஏரியில் மூன்று மாணவர்கள் குளிக்க சென்றனர். அதில் இரண்டு மாணவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது, சேற்றில் சிக்கி தத்தளித்தனர். உடன் சென்ற தமிழ்மணி என்ற சிறுவன் சத்தமிட, அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றிடுவதற்குள், இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையம் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய மாணவர்களை தேடினர். இரண்டு மணி நேரம் போரட்டத்துக்குப் பின்னர், இரண்டு பேரின் உடலை வீரர்கள் மீட்டனர்.
கன்னங்குறிச்சி போலீஸார் விசாரணையில், கன்னங்குறிச்சி, கோவிந்தசாமி காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (17), அதேபகுதியை சேர்ந்த பாலாஜி (16) என்பது தெரியவந்தது.
இதில் பிரசாந்த் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். பாலாஜி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறையில் இருந்த மாணவர்கள் ஏரியில் குளிக்க வந்த போது, ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.